மீஞ்சூர் அருகே துப்பாக்கி முனையில் பணம் பறித்த 2 பேர் கைது


மீஞ்சூர் அருகே துப்பாக்கி முனையில் பணம் பறித்த 2 பேர் கைது
x
தினத்தந்தி 7 Sept 2019 4:15 AM IST (Updated: 7 Sept 2019 12:29 AM IST)
t-max-icont-min-icon

மீஞ்சூர் அருகே துப்பாக்கி முனையில் பணம் பறித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

மீஞ்சூர்,

திருவள்ளூர் மாவட்டத்தில் கொலை, கொள்ளை வழிப்பறி போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க மாவட்டபோலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன் உத்தரவிட்டிருந்தார். இதனையடுத்து பொன்னேரி காவல்துறை உதவி கண்காணிப்பாளர் பவன்குமார்ரெட்டி, கும்மிடிபூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு கல்பனாதத் ஆகியோர் மேற்பார்வையில் அனைத்து போலீஸ் நிலையங்களிலும் இன்ஸ்பெக்டர் தலைமையில் குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்களை கண்காணித்து வந்தனர்.

இந்தநிலையில் அத்திப்பட்டு புதுநகரில் வசிக்கும் வாசு (60) சென்னை செங்குன்றத்தில் உள்ள உறவினரை பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் 400 அடி மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். சீமாபுரம் செல்லும் கொசஸ்தலை ஆற்றின் மேம்பாலத்தின் வழியாக செல்லும் சர்வீஸ் சாலையின் அருகே திடீரென மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் வாசுவை தடுத்து நிறுத்தினர். கத்தியை கழுத்தில் வைத்தும் துப்பாக்கி முனையில் வாசுவின் பாக்கெட்டில் இருந்த ரூ.300-ஐ பறித்து சென்றனர்.

இதையடுத்து அவர் சத்தம் போட்டார். மர்மநபர்களை அந்த பகுதி மக்கள் விரட்டினர். இந்த நிலையில் ரோந்துப்பணியில் ஈடுபட்ட கும்மிடிப்பூண்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து மற்றும் போலீசார் தப்பி ஓட முயன்ற 2 பேரை பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில் அவர்கள் புது கும்மிடிபூண்டியை சேர்ந்த மணிகண்டன் என்கிற போண்டாமணி (வயது 28) வெங்கல் கோடுவல்லி கிராமத்தை சேர்ந்த யுவராஜ் (28) என்பது தெரியவந்தது. போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.

Next Story