திருவண்ணாமலை - சென்னை இடையே ரெயில் சேவை தொடங்க வேண்டும் - சி.என்.அண்ணாதுரை எம்.பி. வலியுறுத்தல்


திருவண்ணாமலை - சென்னை இடையே ரெயில் சேவை தொடங்க வேண்டும் - சி.என்.அண்ணாதுரை எம்.பி. வலியுறுத்தல்
x
தினத்தந்தி 7 Sept 2019 4:15 AM IST (Updated: 7 Sept 2019 2:11 AM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை-சென்னை இடையே உடனடியாக ரெயில்சேவை தொடங்க வேண்டும் என திருச்சியில் ரெயில்வே அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டத்தில் சி.என்.அண்ணாதுரை எம்.பி.வலியுறுத்தினார்.

கலசபாக்கம், 

திருச்சி ரெயில்வே பயிற்சி பள்ளி வளாகத்தில் தெற்கு ரெயில்வே தலைமை அதிகாரிகள் மற்றும் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் திருவண்ணாமலை எம்.பி. சி.என். அண்ணாதுரை கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

திருவண்ணாமலைக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், மாதந்தோறும் பவுர்ணமியன்று 15 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்களும் வருகின்றனர். எனவே திருவண்ணாமலை - சென்னை இடையே உடனடியாக ரெயில் சேவை தொடங்கப்பட வேண்டும். திண்டிவனம்- திருவண்ணாமலை புதிய ரெயில் பாதை பணிகள் தற்போது நில ஆர்ஜிதப் பணிகள் முடிவுற்ற நிலையில் அடுத்தகட்ட பணிகளை உடனடியாக தொடங்கி விரைவில் முடிக்க வேண்டும்.

இந்த 2 கோரிக்கைகளையும் பல வருடங்களாக முன்னாள் அமைச்சரும், திருவண்ணாமலை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான எ.வ.வேலு வலியுறுத்தி வருகிறார். இந்த திட்டம் முழுமையாக மக்களுக்கு பயனடைய வேண்டுமெனில் செங்கம் வழியாக ஜோலார்பேட்டை வரை இணைக்க புதிய திட்டம் அறிவிக்க வேண்டும்.

வியாபாரிகள், பொதுமக்கள் நீண்ட நாள் கோரிக்கையான ஹவுரா- புதுச்சேரி அதிவிரைவு ரெயில் திருவண்ணாமலை ரெயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும்.

திண்டிவனம் ரெயில்வே கேட் மேம்பாலப் பணிகள் நடைபெறுவதாலும், நகரில் ரெயில்வே கேட்டை கடக்கும் போதும் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாலும் 2 சுரங்கப்பாதை அமைத்து தர வேண்டும். திருவண்ணாமலை ரெயில் நிலையம் மிகவும் மோசமான கட்டமைப்புடன், விளக்கு வசதி, கழிப்பிட வசதி, சி.சி.டி.வி. கேமரா வசதி, மேற்கூரை வசதிகள் இல்லாமல் உள்ளது. குறிப்பாக ரெயில் நிலையத்தில் பெயர் பலகையே இல்லை. எனவே திருவண்ணாமலை ரெயில் நிலையம் தரம் உயர்த்தப்பட வேண்டும். ரெயில்வே பொது மேலாளர் ஒரு நாள் அங்கு தங்கி ஆய்வு செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். ரெயில்வே பொது மேலாளர் இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

Next Story