மணிகண்டம் அருகே, போலி மதுபான ஆலை கண்டுபிடிப்பு - அண்ணன், தம்பி உள்பட 3 பேர் கைது
மணிகண்டம் அருகே குடிசையில் செயல்பட்ட போலி மதுபான ஆலை கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக அண்ணன், தம்பி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:-
மணிகண்டம்,
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் போலி மதுபானங்கள் விற்கப்படுவதாக அடிக்கடி புகார் வந்த வண்ணம் இருந்தது. இதுபற்றி போலீசார் விசாரணை நடத்திய போது, திருச்சி மாவட்டம் மணிகண்டம் பகுதியில் இருந்துதான் போலி மது பானங்கள் சப்ளை செய்யப்படுவதாக தெரியவந்தது. இதைத்தொடர்ந்து திருச்சி மதுவிலக்கு மத்திய புலனாய்வுப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் அரங்கநாதன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு, போலி மதுபான ஆலை குறித்து கண்காணிக்கப்பட்டது.
அப்போது, தஞ்சாவூர் மாவட்டத்தில் ஏற்கனவே போலி மதுபானம் தயாரித்த வழக்கில் அங்கு வேலை பார்த்த கரூர் மாவட்டம் குளித்தலையை சேர்ந்த பாலகிருஷ்ணனின் மகன்களான மதன்(வயது 23), சுமன்(20) ஆகியோர் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் இருப்பதும், அவர்கள் அடிக்கடி மணிகண்டம் அருகே அளுந்தூர் பகுதிக்கு அடிக்கடி வந்து செல்வதும் தெரியவந்தது. உடனே அண்ணன், தம்பி 2 பேரையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில், அளுந்தூரை சேர்ந்த நாகராஜ்(36) என்பவரின் குடிசை வீட்டில் வைத்து போலி மதுபானம் தயாரித்து, அவற்றை விராலிமலை மற்றும் பேராம்பூர் பகுதியில் விற்பனை செய்வதும், தஞ்சாவூரில் ஏற்கனவே போலி மது ஆலை நடத்திய பாக்கெட் ராஜா என்ற ராஜ்குமார்(35) மற்றும் விராலிமலை அருகே உள்ள ராமகவுண்டம்பட்டியை சேர்ந்த ரமேஷ்(50) ஆகியோர் இதற்கு உடந்தையாக இருந்தது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து போலீசார் நேற்று முன்தினம் நள்ளிரவில் அளுந்தூருக்கு சென்று நாகராஜின் வீட்டில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, அங்கு போலி மது தயாரிப்பதற்கான எரிசாராயம், மினரல்வாட்டர், மதுவுக்கான எசன்ஸ், போலி லேபிள்கள், 14 ஆயிரம் மதுபாட்டில் மூடிகள், மூடியில் ஒட்டுவதற்கான ஹாலோகிராம் ஸ்டிக்கர்கள், 3 எந்திரங்கள், 3 ஆயிரம் காலிபாட்டில்கள் ஆகியவை இருந்தன.
இதைத்தொடர்ந்து அவற்றை போலீசார் பறி முதல் செய்ததுடன், அந்த போலி மதுபான ஆலைக்கு ‘சீல்’ வைத்தனர். பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மதன், சுமன், நாகராஜ் ஆகியோரை கைது செய்தனர். மேலும், ராஜ்குமார், ரமேஷ் ஆகியோரை தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story