சிறுமியை கடத்தி திருமணம்: பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை
சிறுமியை கடத்தி வலுக்கட்டாயமாக திருமணம் செய்து, பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து பெரம்பலூர் மகிளா கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, பசும்பலூர் கிராமத்தை சேர்ந்தவர் காசிநாதன். இவரது மகன் மணிகண்டபிரபு(வயது 21). இவர் 15 வயதுடைய 10-ம் வகுப்பு படித்த மாணவியை ஒரு தலையாக காதலித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 24-ந் தேதி பள்ளிக்கு ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்த அந்த சிறுமியை மணிகண்டபிரபு வழிமறித்துள்ளார். பின்னர் அவர் அந்த சிறுமியை கடத்தி சென்று கும்பகோணத்தில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்க வைத்துள்ளார். தொடர்ந்து தஞ்சாவூர் உள்ள ஒரு கோவிலில் வைத்து அந்த சிறுமிக்கு மணிகண்டபிரபு வலுக்கட்டாயமாக தாலி கட்டி திருமணம் செய்தும், பின்னர் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதையடுத்து நடந்த சம்பவத்தை யாரிடம் கூறினால் கொலை செய்து விடுவதாக அந்த சிறுமியை மணிகண்டபிரபு மிரட்டினாராம். மேலும் அவரை அடித்தும், கொலை முயற்சியிலும் மணிகண்டபிரபு ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து சில நாட்கள் அந்த சிறுமியுடன் மணிகண்டபிரபு சென்னையில் தலைமறைவாக தங்கியுள்ளார்.
சென்னையில் மணிகண்டபிரபுவுக்கு சரியான வேலை ஏதும் கிடைக்காததால், அவர் வேலை தேடி திருப்பூர் செல்வதற்கு திட்டமிட்டிருந்தார். பின்னர் கடந்த ஆண்டு நவம்பர் 1-ந் தேதி அந்த சிறுமியையும் அழைத்து கொண்டு ஒரு பஸ்சில் திருப்பூருக்கு மணிகண்டபிரபு சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த பஸ் பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் நின்றபோது, அந்த சிறுமி மணிகண்டபிரபுவிடம் கழிப்பிடம் சென்று வருவதாக கூறி, ஏமாற்றி விட்டு அங்கிருந்து தப்பி அவரது சொந்த ஊருக்கு சென்று விட்டார். பின்னர் அந்த சிறுமி தனக்கு நடந்த துயரத்தை தனது தாயிடம் கூறி அழுது புலம்பினார். இதையடுத்து அவரது தாய் வி.களத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து, தலைமறைவாகி இருந்த மணிகண்டபிரபுவை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆனால் மணிகண்டபிரபு ஜாமீனில் வெளியே வந்தார். இது தொடர்பான வழக்கு பெரம்பலூர் மாவட்ட மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது.
நேற்று இந்த வழக்கை விசாரித்த மகிளா கோர்ட்டு நீதிபதி மலர்விழி தீர்ப்பு அளித்தார். 15 வயதுடைய சிறுமியை அத்துமீறி கடத்தி சென்றதற்காக மணிகண்டபிரபுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், சிறுமியை அடித்தும், கொலை முயற்சி செய்ததற்காக 7 ஆண்டு சிறை தண்டனையும், சிறுமியை குழந்தை திருமணம் செய்ததற்காக 2 ஆண்டு சிறை தண்டனையும், மேலும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தற்காக போக்சோ சட்டத்தின் கீழ் 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி மலர்விழி அதிரடி தீர்ப்பை வழங்கினார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு வழங்கும் இழப்பீடு தொகையை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு விரைந்து பெற்று கொடுக்குமாறு கூறினார். இந்த சிறை தண்டனை அனைத்தையும் மணிகண்ட பிரபு ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டுமென நீதிபதி மலர்விழி தனது தீர்ப்பில் கூறியிருந்தார்.
இந்த வழக்கில் மகிளா கோர்ட்டு அரசு தரப்பு வக்கீல் வினோத்குமார் ஆஜராகி வாதாடினார். இதையடுத்து மணிகண்டபிரபுவை போலீசார் கோர்ட்டில் இருந்து பலத்த பாதுகாப்புடன் அழைத்து சென்று திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story