வனத்துறை சார்பில் மாவட்ட அளவிலான ஓவியம், பேச்சுப்போட்டிகள் - 400 மாணவ, மாணவிகள் பங்கேற்பு
நாமக்கல்லில் வன உயிரின வார விழாவை முன்னிட்டு வனத்துறை சார்பில் மாவட்ட அளவிலான ஓவியம் மற்றும் பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் 400 பேர் பங்கேற்றனர்.
நாமக்கல்,
தமிழக அரசின் வனத்துறை சார்பில் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் முதல் வாரம், வன உயிரின வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு வருகிற அக்டோபர் மாதம் நடைபெற உள்ள வன உயிரின வார விழாவை முன்னிட்டு ஒவ்வொரு மாவட்டத்திலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஓவியம் மற்றும் பேச்சுப்போட்டிகளை நடத்தும்படி சென்னை முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் வன உயிரினக்காப்பாளர் உத்தரவிட்டு இருந்தார்.
அதன்படி நேற்று நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நாமக்கல் மாவட்ட வனத்துறை சார்பில் மாவட்ட அளவிலான ஓவியம் மற்றும் பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட்டது. ‘தண்ணீருக்குள் வாழ்க்கை’ என்ற தலைப்பில் ஓவியப்போட்டியும், ‘மனித-வனஉயிரினம் மோதல் மற்றும் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள்’ என்ற தலைப்பில் பேச்சுப்போட்டியும் நடத்தப்பட்டது.
9-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கும், கல்லூரி மாணவ, மாணவிகளுக்கும் என 2 பிரிவுகளாக பேச்சுப்போட்டிகள் நடந்தது. இதேபோல் 5 பிரிவுகளாக ஓவியப்போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் 400 பேர் பங்கேற்று தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினர்.
இந்த போட்டிகளில் முதலிடத்தை பிடித்த மாணவர்கள் மாநில அளவில் நடைபெற உள்ள போட்டிகளில் பங்கேற்க உள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். நாமக்கல் மாவட்ட வன அலுவலர் (பொறுப்பு) டாக்டர் பெரியசாமி அறிவுறுத்தலின்பேரில் ஓவியம் மற்றும் பேச்சுப்போட்டிகளுக்கான ஏற்பாடுகளை வனச்சரக அலுவலர்கள் ரவிச்சந்திரன், நீலமேகம், பழனிசாமி, பாலு மற்றும் வனத்துறை அலுவலர்கள் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story