ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க கோரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு
அரூர் அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க கோரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரூர்,
தர்மபுரி மாவட்டம் அரூர் ஒன்றியம், எல்லப்புடையாம்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை சுற்று வட்டாரத்தை சேர்ந்த 48 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். அதேபோல், அந்த பள்ளி வளாகத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் 25 மாணவர்கள் முன்பருவ கல்வியை பெறுகின்றனர்.
இந்த தொடக்கப்பள்ளியில் 2 ஆசிரியர்கள், ஒரு தலைமை ஆசிரியர் என 3 பேர் பணியில் இருந்தனர். இதில், ஒரு ஆசிரியர் இடமாறுதலில் சென்று விட்டார். மேலும் ஒரு ஆசிரியர் அண்மையில் வேறு பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதனால் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஒரு ஆசிரியர் மட்டுமே மாணவர்களுக்கு பாடம் நடத்தி வந்தார்.
இந்தநிலையில் தலைமை ஆசிரியர் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் விடுப்பில் இருந்து வருகிறார். ஆசிரியர்கள் இல்லாததால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டது. இதனால் இந்த பள்ளிக்கு கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று பொதுமக்கள் தரப்பில் கல்வித்துறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க கோரி நேற்று வகுப்பை புறக்கணித்து நுழைவுவாயில் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களுடன் பொதுமக்களும் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் அரூர் கல்வித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று கூடுதலாக ஆசிரியர் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து, மாணவர்கள் வகுப்புகளுக்கு சென்றனர்.
Related Tags :
Next Story