நாகர்கோவிலில் இருந்து ஊர்வலமாக எடுத்து சென்று கன்னியாகுமரி கடலில் விநாயகர் சிலைகள் கரைப்பு


நாகர்கோவிலில் இருந்து ஊர்வலமாக எடுத்து சென்று கன்னியாகுமரி கடலில் விநாயகர் சிலைகள் கரைப்பு
x
தினத்தந்தி 6 Sep 2019 10:30 PM GMT (Updated: 6 Sep 2019 8:58 PM GMT)

குமரி மாவட்ட சிவசேனா சார்பில் நாகர்கோவிலில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட விநாயகர் சிலைகள் கன்னியாகுமரி கடலில் கரைக்கப்பட்டன. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

கன்னியாகுமரி, 

குமரி மாவட்ட சிவசேனா சார்பில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கடந்த 2-ந் தேதி 100 இடங்களில் விநாயகர் சிலைகள் பூஜைக்காக வைக்கப்பட்டன. அவற்றில் 78 சிலைகள் நேற்று மதியம் 2 மணிக்கு நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலுக்கு கொண்டு வரப்பட்டன. பின்னர் அங்கிருந்து 3 மணிக்கு 54 வாகனங்களில் கன்னியாகுமரிக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன. ஊர்வலத்தை தொழிலதிபர் அழகி விஜி தொடங்கி வைத்தார்.

ஊர்வலம் மணிமேடை சந்திப்பு, மீனாட்சிபுரம், கோட்டார், சுசீந்திரம், கொட்டாரம் வழியாக மாலை 4 மணியளவில் விவேகானந்தபுரம் சென்றடைந்தது.

அங்கிருந்து விநாயகர் சிலைகள் மேளதாளம் முழங்க கன்னியாகுமரி சங்கிலித்துறை கடற்கரைக்கு கொண்டு செல்லப்பட்டன. அங்கு சிலைகளை வரிசையாக அடுக்கி வைத்து பூஜைகள் நடத்தப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர், 78 விநாயகர் சிலைகளும் ஒன்றன்பின் ஒன்றாக முக்கடல் சங்கமத்தில் கரைக்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சிக்கு சிவசேனா மாநில பொதுச்செயலாளர் ராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் ஜெயராஜன் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு மாநில ஒருங்கிணைப்பாளர் அண்ணாமலை ஆசியுரை வழங்கினார். மாநில தலைவர் ரவிச்சந்திரன் வாழ்த்தி பேசினார். இதில் மாவட்ட பொதுச்செயலாளர் ராஜன், மாவட்ட துணைத்தலைவர் குமாரன்தம்பி, செயலாளர் மனோகர், பொருளாளர் அர்ச்சுனன், கன்னியாகுமரி நகர தலைவர் சுபாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் தலைமையில், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விஜயபாஸ்கர், கன்னியாகுமரி துணை போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், உதவி போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் மற்றும் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலோர பாதுகாப்பு இன்ஸ்பெக்டர் சைரஸ் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மாவட்ட தீயணைப்பு நிலைய அதிகாரி கார்த்திகேயன், கன்னியாகுமரி தீயணைப்பு அலுவலர் வெங்கட சுப்பிரமணியன் ஆகியோர் தலைமையில் தீயணைப்பு வாகனத்துடன் வீரர்கள் அங்கு நிறுத்தப்பட்டிருந்தன. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இன்று(சனிக்கிழமை) இந்து மகாசபா சார்பில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் சொத்தவிளை பீச்சிலும், நாளை(ஞாயிற்றுக்கிழமை) இந்து முன்னணி, பா.ஜனதா மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் வைக்கப்பட்ட சிலைகள் சங்குத்துறை பீச் உள்பட மாவட்டத்தில் உள்ள பல்வேறு நீர்நிலைகளில் கரைக்கப்படுகிறது.

மேலும் மணவாளக்குறிச்சி இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலை ஊர்வலம் இன்று (சனிக்கிழமை) மணவாளக்குறிச்சி சந்திப்பில் புறப்படுகிறது. இந்து முன்னணி மாவட்ட தலைவர் மிசா சோமன் தலைமை தாங்குகிறார். காளி வரவேற்புரையாற்றுகிறார். ஊர்வலத்தை மாநில செயற்குழு உறுப்பினர் குழிச்சல் செல்லன் தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து விநாயகர் ஊர்வலமானது மணவாளக்குறிச்சி பகுதியில் உள்ள கோவில்களுக்கு சென்று தீபாராதனை நடக்கிறது. மதியம் 1.30 மணிக்கு வடக்கன்பாகம் சக்தி விநாயகர் கோவிலில் அன்னதானம் வழங்கப்படுகிறது. பின்னர் விநாயகர் சிலைகள் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் மாலை 6 மணிக்கு சின்னவிளை கடலில் கரைக்கப்படுகிறது. விழா நிறைவுரையை பா.ஜனதா மாநில துணை தலைவர் எம்.ஆர்.காந்தி முடித்து வைக்கிறார்.

Next Story