வருங்கால வைப்பு நிதி அலுவலகம் முன்பு பீடித்தொழிலாளர்கள் போராட்டம்


வருங்கால வைப்பு நிதி அலுவலகம் முன்பு பீடித்தொழிலாளர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 7 Sept 2019 3:00 AM IST (Updated: 7 Sept 2019 2:28 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் பீடித்தொழிலாளர்கள் குறைந்தபட்சம் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் கேட்டு போராட்டம் நடத்தினர்.

நெல்லை, 

நெல்லை மாவட்ட பீடித்தொழிலாளர்கள் சங்கம் (சி.ஐ.டி.யு) சார்பில் நேற்று நெல்லை வருங்கால வைப்பு நிதி அலுவலகம் முன்பு போராட்டம் நடைபெற்றது. அதாவது ஓய்வு பெற்ற பீடித்தொழிலாளர்கள் மற்றும் அனைத்து ஓய்வூதியர்களுக்கும் குறைந்தபட்சம் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும். உச்சநீதிமன்ற உத்தரவுப்படி ரூ.1,000-க்கு கீழ் ஓய்வூதியம் பெற்று வரும் அனைத்து தொழிலாளர்களுக்கும் வட்டியுடன் மாதம் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

வருங்கால வைப்பு நிதி பணம், ஓய்வூதியம் வழங்கிய ஆதார் எண், பான்கார்டு உள்ளிட்ட பல்வேறு விவரங்களை கேட்டு அலைக்கழிப்பதை தடுத்து நிறுத்திவிட்டு, ஏற்கனவே வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் உள்ள சான்றிதழ்கள் மூலம் பணம், ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஆவணங்களில் சிறு பிழைகளுக்கு தொழிலாளர்களிடம் திருத்த கோரி பல ஆண்டுகள் பணப்பலன்களை நிறுத்தி வைப்பதை சரி செய்து பணப்பலன்களை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.

நெல்லை மாவட்ட தலைவர் ராஜாங்கம் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் மகாவிஷ்ணு, அருள் சேவியர், சண்முகம், குருசாமி, இந்திரா, கற்பகவல்லி, இசக்கிராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பீடித்தொழிலாளர் சம்மேளன பொதுச் செயலாளர் திருச்செல்வன், பொதுச் செயலாளர் வேல்முருகன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

போராட்டத்தில் மாவட்ட பொருளாளர் ஆரியமுல்லை, இணை செயலாளர் காமராஜ், ஓய்வூதியர் சங்க நிர்வாகிகள் வேலு, சங்கரமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story