வேதாரண்யம் அருகே பரிதாபம்: மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதல், 3 வாலிபர்கள் பலி - மேலும் 2 பேர் படுகாயம்


வேதாரண்யம் அருகே பரிதாபம்: மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதல், 3 வாலிபர்கள் பலி - மேலும் 2 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 7 Sept 2019 3:15 AM IST (Updated: 7 Sept 2019 2:29 AM IST)
t-max-icont-min-icon

வேதாரண்யம் அருகே 2 மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 3 வாலிபர்கள் பலியானார்கள். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். நேற்று இரவு நடந்த இந்த விபத்து பற்றிய விவரம் வருமாறு:-

வேதாரண்யம்,

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள வெள்ளப்பள்ளம் மீனவர் காலனியை சேர்ந்தவர்கள் முருகன் மகன் திணேஷ்(வயது 23), செல்வராஜ் மகன் செல்வம்(25), தங்கமணி மகன் அருண்(22). இவர்கள் 3 பேரும் நேற்று இரவு 10.30 மணி அளவில் நாகப்பட்டினத்தில் இருந்து வெள்ளப்பள்ளம் நோக்கி ஒரு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டு இருந்தனர்.

அதே நேரத்தில் பழங்கள்ளிமேட்டை சேர்ந்த கலியமூர்த்தி மகன் கருணாகரன்(27), காளியப்பன் மகன் குமரேசன்(26) ஆகிய இருவரும் கள்ளிமேட்டில் இருந்து நாகப்பட்டினம் நோக்கி ஒரு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தனர். வெள்ளப்பள்ளம் அருகே உள்ள வேப்பமரத்தடி பஸ் நிறுத்தம் அருகில் முன்னாள் சென்ற ஒரு காரை திணேஷ் உள்பட 3 பேரும் வந்த மோட்டார் சைக்கிள் முந்திச்செல்ல முயன்றபோது எதிர்பாராதவிதமாக கருணாகரன் உள்பட 2 பேரும் சென்ற மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதியது.

இந்த விபத்தில் திணேஷ், செல்வம், கருணாகரன் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். மேலும் அருண், குமரேசன் ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர். உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த அவர்கள் இருவரையும் அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் வேதாரண்யம் சரக துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா, தலைஞாயிறு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபாஷ்சந்திரபோஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். விபத்தில் பலியான 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வேட்டைக்காரனிருப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story