தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் சரக்கு கையாளுவதில் புதிய சாதனை
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் சரக்குகள் கையாளுவதில் புதிய சாதனை படைத்து உள்ளது. இதுகுறித்து வ.உ.சி. துறைமுகம் பொறுப்பு கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தூத்துக்குடி,
தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் இந்த நிதியாண்டு ஆகஸ்டு மாதம் 34.29 லட்சம் டன் சரக்குகளை கையாண்டு, கடந்த நிதியாண்டில் ஆகஸ்டு மாதம் கையாண்ட சரக்குகளை ஒப்பிடுகையில் 30.93 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. இந்த நிதியாண்டு ஆகஸ்டு மாதம் வரை 15.15 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டு கடந்த நிதியாண்டை ஒப்பிடுகையில் 7.29 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. இது புதிய சாதனை ஆகும். இதன்மூலம் இந்திய பெருந்துறைமுகங்களுக்குள் சரக்குகள் கையாளுவதின் வளர்ச்சி விகிதத்தில் வ.உ.சி. துறைமுகம் 3-வது இடத்தை பிடித்துள்ளது.
இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணம், நிலக்கரி, சரக்கு பெட்டகங்கள், உரம், ராக் பாஸ்பேட், கந்தக அமிலம், பாமாயில் மற்றும் மரத்தடிகள் ஆகியவை அதிகமாக இறக்குமதி செய்யப்பட்டு இருப்பதும், எந்திரங்கள், கிரானைட்டுகள் போன்றவை அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டு இருப்பதுமே ஆகும். வ.உ.சி. துறைமுகம் நடப்பு நிதியாண்டு ஆகஸ்டு வரை 3 லட்சத்து 53 ஆயிரத்து 306 சரக்கு பெட்டகங்களை கையாண்டு 13.16 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வ.உ.சி. துறைமுக பொறுப்பு கழக தலைவர் ராமசந்திரன், இந்த சாதனைக்கு காரணமான துறைமுக உபயோகிப்பாளர்கள், கப்பல் முகவர்கள், அனைத்து அதிகாரிகள், ஊழியர்களுக்கு தனது பாராட்டை தெரிவித்து உள்ளார். அதோடு வ.உ.சி. துறைமுகம் அதிவிரைவில் ஒரு சரக்கு பெட்டக பரிமாற்ற முனையமாக மாறுவதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story