கூட்டணி கட்சி தலைவர்களுடன் பேசி நாங்குநேரியில் காங்கிரஸ் போட்டியிடுவது குறித்து முடிவு: நெல்லை மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்தில் கே.எஸ்.அழகிரி தகவல்
நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுவது குறித்து கூட்டணி கட்சி தலைவர்களுடன் பேசி முடிவு எடுக்கப்படும் என்று நெல்லை மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்தில் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.
நாங்குநேரி,
நெல்லை மாவட்ட காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம் நாங்குநேரியில் நேற்று நடந்தது. மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை தாங்கினார். மாநில செயல் தலைவர்கள் வசந்தகுமார் எம்.பி., மயூரா ஜெயக்குமார், மாவட்ட தலைவர்கள் சங்கரபாண்டியன் (மாநகர்), பழனி நாடார் (மேற்கு) ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிழக்கு மாவட்ட தலைவர் எஸ்.கே.எம்.சிவகுமார் வரவேற்று பேசினார்.
அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சஞ்சய்தத் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்தியாவின் பொருளாதாரத்தை உயர்த்தியவர்கள் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கும், முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரமும் தான் என்பதை உலக மக்கள் அனைவரும் அறிவார்கள். காங்கிரஸ் ஆட்சியில் இருந்ததைவிட தற்போது பொருளாதாரம் சரிந்து விட்டது. இதனால் தான் மோடி அரசு, காங்கிரஸ் தலைவர்களை பழிவாங்க வேண்டும் என்ற நோக்கத்தில் ப.சிதம்பரத்தை கைது செய்து உள்ளது. இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி 38 இடங்களில் வெற்றி பெற்றதால் தான் தமிழகத்தை சேர்ந்த ப.சிதம்பரத்தை பழிவாங்க மத்திய அரசு துடிக்கிறது. அவருக்கு ஆதரவாக இந்தியாவில் உள்ள காங்கிரஸ் கட்சியினர் அனைவரும் உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதைத்தொடர்ந்து மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பேசியதாவது:-
காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இல்லாத நேரத்திலும், தமிழகத்தில் அதிலும் குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் காங்கிரஸ் எழுச்சியாக உள்ளது என்றால் அதற்கு உங்களுடைய தேசிய உணர்வும், காமராஜர் மீது நீங்கள் கொண்ட பற்றும் தான் முக்கிய காரணம் ஆகும். தென்மாவட்டங்கள் காங்கிரஸ் கட்சியின் வேராகவும், உயிராகவும் உள்ளன. தென்மாவட்டங்களில் தான் காங்கிரஸ் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று உள்ளது. இருந்தாலும் நம்மால் ஏன் ஆட்சிக்கு வர முடியவில்லை என்பதை அனைவரும் யோசித்து பார்க்க வேண்டும். நம்முடைய பலவீனங்களை உணர்ந்து அதை எப்படி சாதனையாக மாற்றவேண்டும் என்று யோசிக்க வேண்டும்.
நமது ஊரில் நமது கட்சிக்கு எத்தனை ஓட்டு கிடைக்கும், வார்டில் எத்தனை ஓட்டு கிடைக்கும் என்பதை முதலில் கணக்கு போட்டு பார்க்க வேண்டும். அதை எப்படி உயர்த்த வேண்டும் என்று சிந்திக்க வேண்டும். பொது மேடைகளில் நமது கட்சியில் உள்ள குறைகளை கூறக்கூடாது. காமராஜர் முதல்-அமைச்சராக இருக்கும் வரை தமிழகத்தில் சாராயக்கடையை திறக்கவில்லை. அப்படி கொள்கையில் உறுதியாக இருந்தார். அதேபோல் நாமும் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்த தேவையான தகுதியை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.
ஒழுக்கமும், கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். அவை இல்லாத எந்த படையும் வெற்றி பெற முடியாது. மிகுந்த கட்டுப்பாடு வேண்டும். கட்சி தலைமைக்கு கட்டுப்படுகின்ற கட்சியை தான் மக்கள் விரும்புவார்கள். இதை நன்கு உணர வேண்டும். ஏற்றுக்கொண்ட கொள்கையில் சத்தியத்தை கடைபிடிக்க வேண்டும்.
நாங்குநேரியில் நடைபெறுகின்ற செயல்வீரர்கள் கூட்டத்துக்கும், தேர்தலுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. இது வழக்கமாக நடக்கின்ற கூட்டம் தான். இங்கு பேசியவர்கள், நாங்குநேரி காங்கிரஸ் வெற்றி பெற்ற தொகுதி என்பதால், இங்கு காங்கிரஸ் வேட்பாளர் தான் நிற்க வேண்டும் என்று கூறினார்கள். காங்கிரஸ் தனியாக நின்றால் இந்த கூட்டத்திலேயே வேட்பாளரை அறிவித்து விட்டு சென்று விடுவேன். நாம் ஒரு கூட்டணியில் இருக்கிறோம். அந்த கூட்டணியின் தலைமைக்கு கட்டுப்பட்டு நடப்பது தான் கூட்டணி தர்மம் ஆகும். எனவே, இந்த தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடுவது குறித்து கூட்டணி கட்சி தலைவர்களுடன் கலந்து பேசி தான் முடிவு செய்யப்படும். இருந்தாலும், யார் தேர்தலில் போட்டியிட்டாலும் அவர்களை வெற்றி பெற செய்யக்கூடியது நமது கடமை ஆகும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் பேசியவர்கள் அனைவருமே, நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி தான் போட்டியிட வேண்டும். அதிலும் மண்ணின் மைந்தர்களுக்கு தான் வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று கூறினார்கள்.
கூட்டத்தில், முன்னாள் மத்திய மந்திரி ஆர்.தனுஷ்கோடிஆதித்தன், முன்னாள் எம்.பி.க்கள் பீட்டர் அல்போன்ஸ், ராமசுப்பு, ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. ரவிஅருணன், சக்தி திட்ட ஒருங்கிணைப்பாளர் வி.பி.துரை, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் எம்.எஸ்.காமராஜ், வசந்தா, விவசாய பிரிவு மாநில செயலாளர் பால்ராஜ், மகிளா காங்கிரஸ் தலைவிகள் தனித்தங்கம், நாகம்மாள், மாரியம்மாள், முன்னாள் மாவட்ட தலைவர்கள் மோகன்குமாரராஜா, தமிழ்செல்வன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் குமரேஷ், ராதாபுரம் தொகுதி பொறுப்பாளர் கே.பி.கே.ஜெயகுமார் தனசிங் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நாங்குநேரி நகர தலைவர் சுடலைகண்ணு நன்றி கூறினார்.
Related Tags :
Next Story