மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை: பாபநாசம், சேர்வலாறு அணைகள் நீர்மட்டம் உயர்வு


மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை: பாபநாசம், சேர்வலாறு அணைகள் நீர்மட்டம் உயர்வு
x
தினத்தந்தி 6 Sep 2019 10:30 PM GMT (Updated: 6 Sep 2019 9:00 PM GMT)

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் பாபநாசம், சேர்வலாறு அணைகளின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. குற்றாலம் மெயின் அருவியில் நேற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

நெல்லை,

நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதையொட்டி நெல்லை மாவட்டத்தில் ஏற்கனவே ராமநதி, கருப்பாநதி, குண்டாறு, அடவிநயினார் மற்றும் கொடுமுடியாறு ஆகிய 5 அணைகள் நிரம்பி விட்டன. அந்த அணைகளில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

இதே போல் பாபநாசம், சேர்வலாறு அணைகளின் நீர்மட்டமும் உச்சத்தை நெருங்கி உயர்ந்து கொண்டிருக்கிறது. பாபநாசம் அணை நீர்மட்டம் நேற்று 116 அடியாக உயர்ந்தது. இந்த அணைக்கு வினாடிக்கு 3,637 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து பாசனத்துக்காக 1,405 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 128.48 அடியாக உயர்ந்துள்ளது. பாபநாசம், சேர்வலாறு அணைகள் தலா 3 அடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 51.45 அடியாக இருந்தது. இந்த அணைக்கு வினாடிக்கு 412 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து தாமிரபரணி ஆற்றில் 400 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

கடனா அணை நீர்மட்டம் 74.30 அடியாக உயர்ந்துள்ளது. இந்த அணைக்கு 194 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து 51 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. 84 அடி உயரம் கொண்ட ராமநதி அணை முழு கொள்ளளவை எட்டி விட்டதால், அணைக்கு வரும் 50 கன அடி தண்ணீர் அப்படியே உபரியாக ஆற்றில் வெளியேற்றப்படுகிறது. இதே போல் 72 அடி உயரம் கொண்ட கருப்பாநதி அணை நிரம்பியதால் இந்த அணைக்கு வருகிற 50 கன அடி தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. இதே போல் 36 அடி உயரம் கொண்ட குண்டாறு அணை நிரம்பி விட்டதால் அணைக்கு வருகிற 47 அடி தண்ணீர் வெளியேறுகிறது. கொடுமுடியாறு அணைக்கு 105 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது, இந்த அணையில் இருந்து 50 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. 132 அடி உயரம் கொண்ட அடவிநயினார் அணை நிரம்பி விட்டதால் அணைக்கு வருகிற 87 கன அடி தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் மழையால் குற்றாலம் அருவிகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகமாக உள்ளது. இதனால் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. நேற்று காலை 9 மணி அளவில் மெயின் அருவியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு போலீசார் தடை விதித்தனர். இதனால் ஏமாற்றம் அடைந்த அவர்கள் மற்ற அருவிகளுக்கு சென்று குளித்து மகிழ்ந்தனர். பின்னர் மாலை 4 மணி அளவில் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்தது. இதையடுத்து சுற்றுலா பயணிகள் மீண்டும் குளிப்பதற்கு போலீசார் அனுமதித்தனர்.

நெல்லை மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

அம்பை -5, ஆய்குடி 1, சேரன்மாதேவி -3, செங்கோட்டை -28, தென்காசி 10, பாபநாசம் -37, மணிமுத்தாறு -9, சேர்வலாறு -28, கடனா -9, ராமநதி -2, கருப்பாநதி -5, குண்டாறு -31, கொடுமுடியாறு -15, அடவிநயினார் கோவில் 20.

Next Story