கடலூரில், மதுபோதையில் வகுப்பறைக்கு வந்த ஆசிரியர் பணியிடை நீக்கம்


கடலூரில், மதுபோதையில் வகுப்பறைக்கு வந்த ஆசிரியர் பணியிடை நீக்கம்
x
தினத்தந்தி 6 Sep 2019 10:30 PM GMT (Updated: 6 Sep 2019 9:01 PM GMT)

கடலூரில் மதுபோதையில் வகுப்பறைக்கு வந்த ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

கடலூர்,

கடலூர் மஞ்சக்குப்பத்தில் உள்ள அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் நடத்தும் ஆசிரியர் தாமஸ் நேற்று முன்தினம் தள்ளாடியபடியே வகுப்பறைக்கு பாடம் நடத்த சென்றார். இதைப்பார்த்த மாணவர்கள் அவர் மதுபோதையில் இருந்ததை அறிந்து கடும் அதிர்ச்சி அடைந்தனர். உடனே இதுபற்றி பள்ளி முதல்வரிடம் புகார் செய்தனர்.

இது பற்றி தகவல் அறிந்ததும் கடலூர் புதுநகர் போலீசார் விரைந்து வந்து போதையில் இருந்த ஆசிரியர் தாமசை அழைத்து சென்று அவரை கடுமையாக எச்சரித்து அனுப்பினர்.

ஆசிரியர் தினத்தன்று ஆசிரியரே மதுபோதையில் பள்ளிக்கூடத்துக்கு வந்த சம்பவம் பற்றி அறிந்ததும் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஆறுமுகம் அதிர்ச்சி அடைந்தார். மேலும் இச்சம்பவம் பற்றி விசாரணை நடத்தி உடனடியாக அறிக்கை தருமாறு கடலூர் கல்வி மாவட்ட அதிகாரிக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் கடலூர் கல்வி மாவட்ட அதிகாரி சுந்தரமூர்த்தி அந்த பள்ளிக்கூடத்துக்கு சென்று விசாரணை நடத்தி முதன்மை கல்வி அதிகாரியிடம் அறிக்கையை சமர்ப்பித்தார்.

விசாரணையில் ஆசிரியர் தாமஸ் மதுபோதையில் வகுப்பறைக்கு வந்தது உறுதியானதை அடுத்து அவரை பணியிடை நீக்கம் செய்ய பள்ளி முதல்வருக்கு முதன்மை கல்வி அதிகாரி ஆறுமுகம் பரிந்துரை செய்தார். இதையடுத்து ஆசிரியர் தாமசை பணியிடை நீக்கம் செய்து பள்ளி முதல்வர் அருள்நாதன் நடவடிக்கை மேற்கொண்டார்.

Next Story