பாகூரில் அதிகாரிகள் மீது புகார்: விதை நெல் வழங்க கோரி வேளாண் அலுவலகம் முற்றுகை - விவசாயிகள் திடீர் போராட்டம்


பாகூரில் அதிகாரிகள் மீது புகார்: விதை நெல் வழங்க கோரி வேளாண் அலுவலகம் முற்றுகை - விவசாயிகள் திடீர் போராட்டம்
x
தினத்தந்தி 7 Sept 2019 4:30 AM IST (Updated: 7 Sept 2019 4:19 AM IST)
t-max-icont-min-icon

விதை நெல் வழங்க கோரி பாகூர் வேளாண் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பாகூர்,

பாகூர் பகுதியில் சுமார் 2 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. அதற்கு தேவையான நெல் விதைகள், பாசிக் நிறுவனம் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு, மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வந்தது. சமீபகாலமாக பாசிக் நிறுவனம் முடங்கியதால், இப்பணிகள் தற்போது தனியார் நிறுவனம் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நடப்பு சம்பா பருவத்திற்கு தேவையான பொன்னி, பாப்பட்லா உள்ளிட்ட விதை நெல் வாங்கிட பாகூர் பகுதி 24 கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் பாகூர், கன்னியக்கோவில், சேலியமேடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள வேளாண் அலுவலர்கள் மானிய விலையில் விதை நெல் பெற உரிய அனுமதி (பெர்மிட்) பெற்றனர்.

இந்நிலையில், கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக விதை நெல் வினியோகம் செய்யப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் குற்றம் சாட்டினர். ஜூலை மாதம் போடப்பட்ட அனுமதிக்கு இதுவரை விதை நெல் வழங்கப்படவில்லை. தினமும் இதற்காக வருகிறோம். ஆனால், இருப்பு இல்லை என கூறி தட்டிக் கழித்து பாகூர் வேளாண் இணை இயக்குனர் அலுவலர்கள் திருப்பி அனுப்பினர்.

இதுகுறித்து அதிகாரிகள் மீது புகார் தெரிவித்து விவசாயிகள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த திடீர் போராட்டத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இது சம்பந்தமாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறியதாவது;-

விதை நெல்லுக்கான தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. 46 ரூபாய் 50 பைசா என விற்கப்படும் ஒரு கிலோ விதை நெல், 10 ரூபாய் மானியத்தில், அரசு சார்பில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஆதிதிராவிடர் விவசாயிகளுக்கு 75 சதவீதம் மானியத்தில் வழங்கப்பட்டு வந்தது. தற்போது, யாருக்குமே விதை கிடைக்கவில்லை. இதனால், வெளி மார்க்கெட்டில் விதை நெல் ஒரு கிலோ 55 ரூபாய் முதல் 60 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. கூடுதல் விலை கொடுத்தாலும், விதை நெல் கிடைக்காமல் திண்டாடி வருகின்றோம். மேலும், விதை நெல்லை கையிருப்பில் வைத்துக் கொண்டே, சில விவசாயிகளுக்கு மட்டும் குறைந்த அளவில் விற்பனை செய்து உள்ளனர். பல விவசாயிகளுக்கு வழங்காமல் விதை நெல்லை வேறு பகுதிக்கு அதிகாரிகள் அனுப்பி விட்டனர். உரிய காலத்திற்குள் விதையிடவில்லை எனில் சாகுபடி பாதிக்கப்படும். எனவே, இது குறித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Next Story