தமிழ்தெரிந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமிக்க கேட்டுள்ளோம் - நாராயணசாமி தகவல்


தமிழ்தெரிந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமிக்க கேட்டுள்ளோம் - நாராயணசாமி தகவல்
x
தினத்தந்தி 7 Sept 2019 4:45 AM IST (Updated: 7 Sept 2019 4:43 AM IST)
t-max-icont-min-icon

தமிழ் தெரிந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமிக்க மத்திய அரசை கேட்டுள்ளோம் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

புதுச்சேரி,

புதுவை சட்டசபையில் கேள்வி-பதில் நேரத்தில் அரசு கொறடா அனந்தராமன் எழுப்பிய கேள்வியை தொடர்ந்து நடந்த விவாதம் வருமாறு:-

அனந்தராமன்:- புதுவை மாநிலத்தில் உள்ள மனைப்பிரிவுகளை முறைப்படுத்த அரசு நடவடிக்கை மேற்கொள்ளுமா?

அமைச்சர் நமச்சிவாயம்:- புதுவை மற்றும் காரைக்காலில் ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டம் இல்லாத பகுதிகளில் அடங்கிய மனைப்பிரிவு மற்றும் மனைகளை முறைப்படுத்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அனந்தராமன்:- இது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதுபோல் உள்ளது. 10 வருடத்துக்கு முன்பு பிளாட்டுகள் போடப்பட்டுள்ளன. அரசு இதில் கொள்கை முடிவு எடுக்கவேண்டும். அப்படி செய்யாததால் நில வணிகர்கள் மோசமான நிலையில் உள்ளனர்.

பாஸ்கர்:- இந்த ரியல் எஸ்டேட் தொழிலை நம்பி புரோக்கர்கள் நிறைய பேர் உள்ளனர்.

சாமிநாதன்:- ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்கள் மனைகளுக்காக அரசுக்கு பணம் கட்டுவதில்லை.

அன்பழகன்:- சில மனைப்பிரிவுகளில் பக்கத்து மனைப்பிரிவுகளுக்கு செல்ல சாலை வசதி கூட இல்லை.

அமைச்சர் நமச்சிவாயம்:- கோர்ட்டு உத்தரவின்பேரில்தான் இந்த திட்டத்தை கொண்டுவந்தோம். இதன் மூலம் அரசுக்கு ரூ.40 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

அனந்தராமன்:- நாங்கள் சொல்வதை செய்தால் ரூ.400 கோடி வருமானம் வரும்.

சபாநாயகர் சிவக்கொழுந்து:- பலதரப்பட்ட மக்களின் குறையாக இது உள்ளது. எனவே அரசு நடைமுறைகளை எளிமைப்படுத்த வேண்டும்.

அனந்தராமன்:- இங்கு நிகழ்வுகள் தமிழில் நடக்கிறது. நாம் பேசுவதை மொழிமாற்றம் செய்து அதிகாரிகளுக்கு தெரிவிக்கிறார்களா? அப்படி செய்தால்தானே நமது உணர்வுகள் அதிகாரிகளுக்கு தெரியும்.

முதல்-அமைச்சர் நாராயணசாமி:- நல்ல கருத்தை பதிவு செய்துள்ளர்கள். மத்திய அரசு அனுப்பும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் வட மாநிலங்களில் இருந்து வருகிறார்கள். அவர்களுக்கு தமிழ் தெரியவில்லை. இதனால் சிக்கல் ஏற்படுகிறது. இதுதொடர்பாக மத்திய உள்துறை செயலாளரை சந்தித்து பேசியுள்ளேன். அப்போது தமிழ் தெரிந்த அதிகாரிகளை அனுப்ப கூறினேன்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

Next Story