எதிர்க்கட்சி தலைவர்களை ஒழிக்க மத்திய அரசு முயற்சி; குமாரசாமி பரபரப்பு குற்றச்சாட்டு
எதிர்க்கட்சி தலைவர்களை ஒழிக்க மத்திய அரசு முயற்சி செய்வதாக முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார்.
பெங்களூரு,
சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் காங்கிரசை சேர்ந்த முன்னாள் மந்திரி டி.கே.சிவக்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது கைதை கண்டித்து ராமநகர் மாவட்டத்தில் 2 நாட்கள் முழு அடைப்பு நடைபெற்றது. காங்கிரஸ் சார்பில் மாநிலம் முழுவதும் போராட்டம் நடைபெற்றது.
இந்த நிலையில் ராமநகர் மாவட்டம் கோடிஹள்ளி கிராமத்தில் வசிக்கும் அவரது தாயார் கவுரம்மாவை முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி நேற்று நேரில் சந்தித்து பேசி தைரியம் கூறினார். அதன் பிறகு குமாரசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
டி.கே.சிவக்குமாரை அமலாக்கத்துறையினர் கைது செய்துள்ளனர். அவரிடம் 4 நாட்கள் விசாரணை நடத்திவிட்டு அதன் பிறகு கைது செய்தது சரியல்ல. அவரை கைது செய்து விசாரிக்க வேண்டிய அவசியம் இருக்கவில்லை. மத்திய அரசு விசாரணை அமைப்புகளை தவறாக பயன்படுத்தி எதிர்க்கட்சி தலைவர்களை ஒழிக்க முயற்சி செய்கிறது.
ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் கொடுத்து எதிர்க்கட்சிகளின் எம்.எல்.ஏ.க்களை பா.ஜனதாவினர் விலைக்கு வாங்குகிறார்கள். இந்த பேரத்தில் ஈடுபடுபவர்களின் வீடுகளில் விசாரணை அமைப்புகள் எந்த சோதனையும் நடத்துவது இல்லை. ஆனால் எதிர்க்கட்சி தலைவர்களின் வீடுகளில் திட்டமிட்டு சோதனை செய்கிறார்கள். விசாரணை அமைப்புகள் பாரபட்சத்துடன் நடந்து கொள்வது ஏன்?.
ஆட்சி அதிகாரம் யாருக்கும் நிரந்தரம் அல்ல. காலச்சக்கரம் சுற்றிக்கொண்டே இருக்கும். நாட்டில் வளர்ச்சி ஏற்படவில்லை. பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள் ளது. ஆனால் அதன் மீது மத்திய அரசு கவனம் செலுத்தவில்லை. எதிர்க்கட்சி தலைவர்களை ஒடுக்குவதில் தான் கவனம் செலுத்துகிறார்கள்.
நாட்டு மக்கள் இதை பார்த்து கொண்டு தான் இருக்கிறார்கள். எல்லாவற்றுக்கும் காலமே பதில் சொல்லும். டி.கே.சிவக்குமார் கைது செய்யப்பட்டுள்ளதால் அவரது தாயார் மிகுந்த வேதனையில் இருக்கிறார். அந்த வயதான பெண்மணி வடிக்கும் கண்ணீர், கர்நாடகத்தில் பா.ஜனதாவுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.
நான் முதல்-மந்திரியாக இருந்தபோது எடியூரப்பா எங்கள் கட்சி எம்.எல்.ஏ.வை விலைக்கு வாங்க பேரம் பேசினார். அந்த ஆடியோ உரையாடலை நான் தான் வெளியிட்டேன். நான் நினைத்திருந்தால் விசாரணை அமைப்புகளை தவறாக பயன்படுத்தி, எடியூரப்பாவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்திருக்க முடியும். அதை நான் விரும்பவில்லை.
சட்ட நடவடிக்கை எடுத்திருந்தால், குமாரசாமி பழிவாங்கும் அரசியலை செய்கிறார் என்று குறை கூறி இருப்பார்கள். முன்னாள் முதல்-மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகனான தொழில் அதிபர் சித்தார்த், தான் எழுதிய கடிதத்தில், வருமான வரித்துறை மிகுந்த தொல்லை கொடுத்ததாக கூறியிருக்கிறார். ஆனால் அதை அப்படியே மூடிமறைத்துவிட்டனர்.
இவ்வாறு குமாரசாமி கூறினார்.
Related Tags :
Next Story