சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கட்டிட தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது


சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கட்டிட தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது
x
தினத்தந்தி 8 Sept 2019 4:30 AM IST (Updated: 7 Sept 2019 10:57 PM IST)
t-max-icont-min-icon

தாராபுரம் அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கட்டிட தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

தாராபுரம்,

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள பொட்டிக்காம்பாளையத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 30) கட்டிட தொழிலாளி. இவர் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு பல்லடத்தைச்சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

தற்போது இவர்களுக்கு 5 வயதில் இரட்டை குழந்தைகளாக பிறந்த மகனும், மகளும் உள்ளனர். இந்த நிலையில் சுப்பிரமணி குடியிருந்த அதே பகுதியில், 14 வயது சிறுமி 8-ம் வகுப்பு வரை படித்துவிட்டு, தனது தாயுடன் வீட்டில் இருந்து வந்துள்ளார். கட்டிட வேலைக்கு ஆள் தேவைப்பட்டதால், சுப்பிரமணி சிறுமியின் தாயாரிடம் சென்று சிறுமியை வேலைக்கு அனுப்பி வைக்கும்படி கேட்டுள்ளார்.

சுப்பிரமணி மீது இருந்த அதிக நம்பிக்கையில் சிறுமியின் தாயார், சுப்பிரமணியுடன் தனது மகளை கட்டிட வேலைக்கு அனுப்பி வைத்துள்ளார். அதையடுத்து சிறுமி தொடர்ந்து ஒரு வார காலம் சுப்பிரமணியுடன் வேலைக்குச் சென்று வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 1-ந்தேதி வேலைக்குச்சென்ற சிறுமி பிறகு வீடு திரும்பவில்லை. வெகுநேரமாகியும் சிறுமி வீடு திரும்பாததால், அதிர்ச்சி அடைந்த அவரது தாயார் சுப்பிரமணியின் வீட்டிற்குச் சென்று விசாரித்துள்ளார்.

அப்போது அங்கிருந்தவர்கள் சுப்பிரமணியமும் வீட்டிற்கு வரவில்லை என்று தெரிவித்ததோடு, சுப்பிரமணி அவரது மனைவி மற்றும் குழந்தைகளை, செம்பட்டியில் உள்ள உறவினர் வீட்டிற்கு அனுப்பி வைத்துவிட்டதாக கூறியுள்ளனர்.

ஒருவேளை சுப்பிரமணி தனது மனைவி மற்றும் குழந்தைகளை பார்க்கச் சென்றிருக்கலாம் என நினைத்து, சிறுமியின் தாயார் செம்பட்டியில் இருந்த சுப்பிரமணியின் மனைவியை தொடர்பு கொண்டு விசாரித்துள்ளார். அப்போது சுப்பிரமணி அங்கு செல்லவில்லை என்பது தெரியவந்துள்ளது.

அதைத்தொடர்ந்து சிறுமியின் தாயாரும், அவரது உறவினர்களும் சிறுமியை பல இடங்களில் தேடி வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த 6-ந்தேதி திருப்பூர் அருகே உள்ள மங்கலத்தைச் சேர்ந்த ஒரு நபர், சிறுமியின் தாயாரை தொடர்பு கொண்டு, அங்குள்ள பஸ் நிறுத்தத்தில் சிறுமி தனியாக நின்று கொண்டிருப்பதாக தகவல் கொடுத்துள்ளார். உடனே சிறுமியின் உறவினர்கள் மங்கலம் சென்று, சிறுமியை மீட்டு வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர்.

அதன் பிறகு சிறுமியிடம் விசாரித்தபோது சுப்பிரமணியுடன் கட்டிட வேலைக்கு சென்றபோது, ஆசை வார்த்தைகளை பேசி, அவரை வெளியூருக்கு அழைத்துச் சென்றுள்ளார். பிறகு அங்கிருந்து பல ஊர்களுக்கு கூட்டிச்சென்றுவிட்டு, கடைசியாக மங்கலத்திற்கு அழைத்து வந்துள்ளனர். பிறகு அங்கு ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, சிறுமியை தங்க வைத்து, அவரை கட்டாயப்படுத்தி, பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.

அதையடுத்து சிறுமியின் தாயார் தாராபுரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் வனிதாமணி வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக இருந்த சுப்பிரமணியை தேடி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று சுப்பிரமணி தாராபுரம் பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருப்பதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து, போலீசார் அங்கு விரைந்து சென்று சுப்பிரமணியை கைது செய்து போக்சோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்துள்ளனர்.

Next Story