மல்லூரில் குடிமராமத்து பணி: கலெக்டர் டி.ஜி.வினய் ஆய்வு


மல்லூரில் குடிமராமத்து பணி: கலெக்டர் டி.ஜி.வினய் ஆய்வு
x
தினத்தந்தி 8 Sept 2019 3:15 AM IST (Updated: 8 Sept 2019 1:51 AM IST)
t-max-icont-min-icon

மல்லூரில் குடிமராமத்து பணியை கலெக்டர் டி.ஜி.வினய் ஆய்வு செய்தார்.

அரியலூர், 

அரியலூர் மாவட்ட பொதுப்பணித்துறை நீர் வள ஆதாரத்துறையின் சார்பில், மல்லூர் கிராமத்தில் உள்ள மாணிக்கவாசகர் ஓடை மற்றும் நைனேரியில் குடிமராமத்து பணிகளின் கீழ் நடந்து வரும் அணைக்கட்டு புதுப்பிக்கப்படும் இடத்தினையும், ஏரி புனரமைக்கும் பணியினையும் கலெக்டர் டி.ஜி.வினய் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறுகையில், அரியலூர் மாவட்டம், திருமானூர் ஊராட்சி ஒன்றியம், மல்லூர் கிராமத்தில் உள்ள மாணிக்கவாசகர் ஓடையில் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் 613 மீட்டர் நீளமுள்ள வடிகால், பழுதடைந்துள்ள அணைக்கட்டில் புனரமைக்கும் பணி மற்றும் புதிய அணைக்கட்டு ஒன்றில் புதுப்பித்தல் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும், மல்லூரிலிருந்து நைனேரியில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் ஏரியின் கரைகள், வரத்துவாய்க்கால், வடிகால் மற்றும் ஏரியிலுள்ள 2 மதகுகளும் புனரமைக்கப்படவுள்ளது என்றார். தொடர்ந்து கலெக்டர் வினய் விவசாயிகளிடம் நடைபெற்று வரும் குடிமராமத்து பணிகள் முறையாக செயல்படுகிறதா? என கேட்டறிந்தார். வரத்து வாய்க்கால், வடிநீர் வாய்க்கால் மற்றும் ஏரியிலுள்ள ஆக்கிரமிப்புகளை முறையாக வரன்முறைப்படுத்தியப்பின், முழுமையாக தூர்வாரப்படும். இப்பணிகள் அனைத்தையும் விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

ஆய்வின்போது, உதவி செயற்பொறியாளர் வேல்முருகன், உதவி பொறியாளர் மருதமுத்து மற்றும் விவசாயிகள், அலுவலர்கள் உடனிருந்தனர்.

Next Story