மாயனூரில் இருந்து புதுக்கோட்டை தெற்கு வெள்ளாறு வரை காவிரி-குண்டாறு இணைப்பு கால்வாய் அமைக்க ரூ.8 ஆயிரத்து 698 கோடி செலவாகும்
மாயனூரில் இருந்து புதுக்கோட்டை தெற்கு வெள்ளாறு வரை காவிரி-குண்டாறு இணைப்பு கால்வாய் அமைக்க ரூ.8 ஆயிரத்து 698 கோடி செலவாகும் என திட்டமிடப்பட்டு உள்ளது என்று கலெக்டர் உமா மகேஸ்வரி தெரிவித்து உள்ளார்.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் மாதந்தோறும் கூட்டப்பட்டு வந்த காவிரி-குண்டாறு இணைப்பு திட்டம் தொடர்பான ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நீண்ட இடைவெளிக்கு பிறகு நேற்று முன்தினம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் உமா மகேஸ்வரி தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் பல்வேறு விவசாயிகள் சங்கங்களை சேர்ந்த தனபதி, துரைமாணிக்கம், மு.மாதவன், மிசா.மாரிமுத்து உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்தை இந்த ஆண்டிலேயே தொடங்கும் வகையில் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
தொடர்ந்து இது குறித்து பொதுப்பணித் துறையின் நீர்வள ஆதாரத் திட்டம் மற்றும் வடிவமைப்பு கோட்ட செயற்பொறியாளர்கள் திருச்சி மூர்த்தி ராஜன், காரைக்குடி முத்தமிழ்செல்வி, உதவி பொறியாளர் உமா சங்கர் ஆகியோர் விளக்கம் அளித்தனர். தொடர்ந்து கலெக்டர் உமா மகேஸ்வரி பேசுகையில், அனைத்து மாநிலங்களிலும் நீர் ஆதாரத்தை பெருக்கும் வகையில் உருவாக்கப்பட்டு உள்ள தேசிய தொலை நோக்கு திட்டத்தின் மூலம் மகாநதி, கோதாவரி, கிருஷ்ணா, பெண்ணாறு, பாலாறு, காவிரி, வைகை, குண்டாறு, ஆகிய நதிகள் இணைக்கப்பட உள்ளன.
இதன் மூலம் 256 கிலோ மீட்டர் நீளமுள்ள காவிரி-குண்டாறு திட்டத்தில் கரூர் மாவட்டம் மாயனூரில் உள்ள காவிரி ஆற்றின் கதவணையில் இருந்து புதுக்கோட்டை மாவட்டத்தில் தெற்கு வெள்ளாறு வரை 119 கிலோ மீட்டருக்கு கால்வாய் அமைக்கப்படும். பின்னர் இந்த பிரதான கால்வாயை அக்னியாறு, அம்புலியாறு, நரசிங்க காவிரி, கொளுவனாறு மற்றும் தெற்கு வெள்ளாறு ஆகிய காட்டாறுகளோடு இணைக்கப்படும். காவிரியில் வெள்ளப் பெருக்கு ஏற்படும்போது இக்கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டு 33 அணைக்கட்டுகள் மூலம் 323 ஏரிகளில் நிரப்பப்படும். இதன் மூலம் புதுக்கோட்டை மாவட்டத்தில் சுமார் 52 ஆயிரம் ஏக்கர் பாசனம் செய்து உறுதி செய்யப்படும்.
இத்திட்டத்துக்காக புதுக்கோட்டை மாவட்டத்தில் 1,583.18 ஏக்கர் பட்டா நிலம், கரூர் மாவட்டத்தில் 925.15 ஏக்கர் பட்டா நிலம், திருச்சி மாவட்டத்தில் 977.66 ஏக்கர் பட்டா நிலம் என 3 மாவட்டங்களில் 3 ஆயிரத்து 484 ஏக்கர் பட்டா நிலமும், 407 ஏக்கர் அரசு நிலமும் கையகப்படுத்தப்பட உள்ளன. நிலம் கையகப்படுத்துவதற்கு ரூ.1,021 கோடி மற்றும் கால்வாய் கட்டுமான பணிக்கு ரூ.7,677 கோடி என மொத்தம் ரூ.8,698 கோடி செலவாகும் என திட்டமிடப்பட்டு உள்ளது. இத்திட்டம் தேசிய தொலை நோக்குத் திட்டத்தின் கீழ் வருவதால் மத்திய அரசின் கொள்கை அளவில் ஒப்புதல் பெறுவதற்காக இதுதொடர்பான கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. ஒப்புதல் அளித்து, நிதி ஒதுக்கப்பட்ட பிறகு இத்திட்டம் தொடங்கப்படும் என்றார். கூட்டத்தில் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story