ஆர்ச்சம்பட்டியில் ரூ.31½ லட்சத்தில் புதிய கால்நடை மருந்தகம்: அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்
ஆர்ச்சம்பட்டியில் ரூ.31½ லட்சத்தில் புதிய கால்நடை மருந்தகத்தை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்.
தோகைமலை,
கரூர் மாவட்டம் தோகைமலை ஊராட்சி ஒன்றியம் ஆர்ச்சம்பட்டியில் ரூ.31½ லட்சம் மதிப்பிலான புதிய கால்நடை மருந்தகம் திறப்பு விழா மற்றும் தோகைமலையில் ராமபத்திரநாயக்கர் குளத்தை தூர்வாரும் பணி தொடக்க விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கினார். மேற்கண்ட புதிய மருந்தகத்தையும், தூர்வாரும் பணியையும் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- தோகைமலை ஊராட்சி ஒன்றியம் ஆர்ச்சம்பட்டியில் உள்ள பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று இங்கு புதிய கால்நடை மருந்தகம் கட்டப்பட்டு திறந்துவைக்கப்பட்டுள்ளது. இந்த கால்நடை மருந்தகம் திறப்பதற்கு முன்பு சுமார் 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நெய்தலூர் கால்நடை மருந்தகத்தை பயன்படுத்தி வந்தனர். தற்போது இந்த கால்நடை மருந்தகம் திறந்துவைத்ததன் மூலம் ஆர்ச்சம்பட்டி, ஆர்.டி. மலை, குழுப்போரி, ஆலந்தூர் ஆகிய கிராமங்களை சேர்ந்த சுமார் 7500 கால்நடைகள் பயன்பெற உள்ளது. ராமபத்திரநாயக்கர் குளம் தூர்வாரப்படுவதன் மூலம் மழைக்காலங்களில் தேக்கிவைக்கப்படும் நீரால் இப்பகுதி நிலத்தடி நீர் மட்டம் உயரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக கால்நடைகளுக்கு தேவையான தாது உப்புகளை அமைச்சர் வழங்கினார். இதைத்தொடர்ந்து கரூர் நகராட்சிக்குட்பட்ட வார்டு எண் 39 மில்கேட் பகுதி, வார்டு எண் 40 ராயனூர் பகுதி, வார்டு எண் 45 தாந்தோன்றிமலை பகுதிகளில் நடந்த தமிழக முதல்-அமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் முகாமில் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக் கொண்டார். இதில், மாவட்ட ஊரகவளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா, நகராட்சி ஆணையர் (பொறுப்பு) ராஜேந்திரன், முன்னாள் அமைச்சர் பாப்பாசுந்தரம், கரூர் நகர கூட்டுறவு வங்கித்தலைவர் திருவிகா, மாவட்ட துணை செயலாளர் சிவசாமி, மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் வி.சி.கே.ஜெயராஜ், தோகைமலை ஒன்றிய செயலாளர் கே.ஆர்.விஜயன், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் என்.ஆர்.சந்திரசேகரன், மாவட்ட இளைஞரணி பொருளாளர் ரெங்கசாமி, ஒன்றிய துணை செயலாளர் துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story