ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் புதிய பஸ் நிலையங்கள் கட்டும் பணி: தஞ்சையில், தற்காலிக பஸ் நிலையம் இன்று முதல் செயல்படுகிறது
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பஸ் நிலையங்கள் புதிதாக கட்டப்படுவதால், தஞ்சையில் தற்காலிக பஸ் நிலையம் இன்று முதல் செயல்பாட்டுக்கு வருகிறது. அங்கு குடிநீர்வசதி, கழிவறை வசதிகளும் தயார் நிலையில் உள்ளன.
தஞ்சாவூர்,
தஞ்சை மாநகராட்சி ‘ஸ்மார்ட்’ சிட்டியாக அறிவிக்கப்பட்டு பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக தஞ்சை பழைய பஸ் நிலையம் மற்றும் அதன் அருகே உள்ள திருவையாறு பஸ்கள் நிற்கும் பஸ் நிலையம் புதிதாக கட்டப்படுகிறது. இதற்காக டெண்டர் விடப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இதையடுத்து பழைய பஸ்நிலையம் மற்றும் திருவையாறு பஸ் நிலையம் ஒரே இடத்தில் செயல்படும் வகையில் தற்காலிக பஸ் நிலையம் கரந்தை போக்குவரத்துக்கழக பணிமனை எதிரே ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பஸ் நிலையம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் செயல்பட உள்ளது.
இது குறித்து தஞ்சை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
‘ஸ்மார்ட் சிட்டி’ எனப்படும் சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் தஞ்சை பழைய பஸ் நிலையம் மற்றும் திருவையாறு செல்லும் பஸ் நிலையம் ஆகியவை புதிதாக மறுகட்டுமானம் செய்யப்படவுள்ளது. அதனால் பழைய பஸ் நிலையம் மற்றும் திருவையாறு செல்லும் பஸ் நிலையத்திற்கு வந்து செல்லும் பஸ்கள் இன்று முதல் தஞ்சை காசி பிள்ளையார் கோவில் தெரு அரசு போக்குவரத்துக்கழக பணிமனை அருகில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்பட உள்ளது.
எனவே பழைய பஸ் நிலையம் மற்றும் திருவையாறு செல்லும் பஸ் நிலையங்களை பயன்படுத்தும் பொதுமக்கள் தற்காலிக பஸ் நிலையத்தை பயன்படுத்தி ஒத்துழைப்பு அளித்திடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தஞ்சை மாநகராட்சி ஆணையர் ஜானகிரவீந்திரன் தலைமையில் தற்காலிக பஸ் நிலையத்தை செயல்படுத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் செயற்பொறியாளர் ராஜகுமாரன், உதவி செயற்பொறியாளர் ராஜசேகரன், மேலாளர் கிளமெண்ட், துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன், தஞ்சை மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன், மோட்டார் வாகன அலுவலர் நெடுஞ்செழியன், வட்டார போக்குவரத்து அதிகாரி கார்த்திகேயன் மற்றும் போக்குவரத்துக்கழக அதிகாரிகள், தனியார் பஸ் உரிமையாளர்கள், மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அப்போது ஆணையர் ஜானகிரவீந்திரன் கூறுகையில், “தற்காலிக பஸ் நிலையத்தில் பயணிகளுக்கு குடிநீர்வசதி, கழிவறை வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. ஆட்டோக்கள் மற்றும் மோட்டார்சைக்கிள் நிறுத்துவதற்கும் தனியாக இடவசதி உள்ளது. பஸ் உள்ளே சென்று வெளியே வருவதற்கு எந்தவித சிரமமும் ஏற்படாத வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மழைகாலத்தில் தண்ணீர் தேங்காத வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காவல்துறை அலுவலகமும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்களுக்கு தேவைப்படும் வசதிகளும் உடனுக்குடன் செய்து கொடுக்கப்படும்”என்றார்.
Related Tags :
Next Story