சேதுபாவாசத்திரம் அருகே, குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல்
சேதுபாவாசத்திரம் அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சேதுபாவாசத்திரம்,
தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே உள்ள முடச்சிக்காடு தெற்கு கிராம பகுதியில் கடந்த 5 ஆண்டுகளாக கடும் வறட்சி நிலவி வருகிறது. நிலத்தடி நீர்மட்டம் படுபாதாளத்துக்கு சென்று விட்டதால், அங்கு உள்ள 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் நீர் நிரப்ப முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக அதே பகுதியில் உள்ள மற்றொரு குடிநீர் தொட்டி மூலமாக பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.
இதில் பொருத்தப்பட்டிருந்த மின் மோட்டார் பழுதடைந்ததால், வேறு மின் மோட்டார் பொருத்தப்பட்டது. ஆனால் இதற்கு மின் இணைப்பு கொடுக்கவில்லை. இதன் காரணமாக குடிநீர் தொட்டியை பயன்படுத்த முடியாத நிலையில் அந்த பகுதியில் குடிநீருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.
தென்னந்தோப்புகளில் உள்ள ஆழ்துளை கிணறுகளில் இருந்து குடிநீர் பிடித்து பொதுமக்கள் நிலைமையை சமாளித்து வருகிறார்கள். குடிநீர் தொட்டிக்கான மின் மோட்டாருக்கு மின் இணைப்பு கொடுப்பதில் மின்வாரிய அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருகிறார்கள் என்பது கிராம மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது.
இந்த நிலையில் நேற்று கிராம மக்கள் குடிநீர் கேட்டு முடச்சிக்காட்டில் இருந்து பேராவூரணி செல்லும் சாலையில் காலிக்குடங்களுடன் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மின்இணைப்பு வழங்கி குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோஷம் எழுப்பினர்.
கிராம மக்களின் திடீர் போராட்டம் காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த கிராம நிர்வாக அதிகாரி ராஜசேகரன் மற்றும் அதிகாரிகள் கிராம மக்களுடன் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது நாளை (திங்கட்கிழமை) மின் இணைப்பு கொடுத்து, குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதன்பேரில் சாலை மறியல் கைவிடப்பட்டது. மறியல் காரணமாக அந்த பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story