கர்நாடக அணைகளில் இருந்து கூடுதல் தண்ணீர் திறப்பு: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 80 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு


கர்நாடக அணைகளில் இருந்து கூடுதல் தண்ணீர் திறப்பு: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 80 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு
x
தினத்தந்தி 7 Sep 2019 10:30 PM GMT (Updated: 7 Sep 2019 8:42 PM GMT)

கர்நாடக அணைகளில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 80 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.

பென்னாகரம்,

கேரள மாநிலம் வயநாடு மற்றும் கர்நாடக மாநிலம் குடகு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் முழு கொள்ளளவை எட்டின. இதனால் இந்த இரு அணைகளில் இருந்தும், தமிழகத்திற்கு உபரிநீர் திறந்து விடப்பட்டது. இதனால் நேற்று முன்தினம் வினாடிக்கு 75 ஆயிரம் கனஅடி பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வந்தது.

இந்த நிலையில் நேற்று காலை முதல் காவிரி ஆற்றில் நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது. இதனிடையே நேற்று மாலை 6 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 80 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. இதனால் காவிரி ஆற்றில் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீர் ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டியது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்ததால் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க விதிக்கப்பட்ட தடை நேற்று 31-வது நாளாக நீடித்தது.

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பரிசல் இயக்க விதிக்கப்பட்ட தடை நேற்று 3-வது நாளாக நீடித்தது. மேலும் ஒகேனக்கல் சத்திரம், நாடார் கொட்டாய், ஊட்டமலை உள்ளிட்ட காவிரி ஆற்று பகுதிகளில் தாழ்வான இடங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு போலீசார் ஒலிப்பெருக்கி மூலம் அறிவுறுத்தினர். மேலும் பொதுமக்கள், சுற்றுலா பயணிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டன.

காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக, கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் உள்ள மத்திய நீர்வளத்துறையினர் அளந்து கண்காணித்து வருகின்றனர். ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் போலீசார், ஊர்க்காவல் படையினர், தீயணைப்பு படையினர் தீவிர ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர். அருவிக்கு செல்லும் நுழைவுவாயிலை போலீசார் பூட்டி சீல் வைத்துள்ளனர்.

இதனிடையே மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியதால் அதன் நீர்த்தேக்கம் தர்மபுரி மாவட்டம் ஏரியூர் அருகே உள்ள நாகமரை கிராமம் வரை காணப்பட்டது. இதனால் இந்த கிராமம் 3 பக்கமும் தண்ணீரும், ஒரு பக்கம் சாலை வசதியும் உள்ளதால் தீபகற்பமாக காட்சி அளித்தது. இந்த கிராமத்தை தண்ணீர் சூழ்ந்து இருந்தாலும் கிராமமக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. இருப்பினும் வருவாய்த்துறையினர் காவிரி ஆற்றில் பொதுமக்கள் குளிக்கக்கூடாது என்று அறிவுறுத்தி வருகின்றனர்.

Next Story