சிறப்பு குறைதீர்க்கும் முகாம்களை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும் - அமைச்சர் சரோஜா வேண்டுகோள்
முதல்-அமைச்சரின் சிறப்பு மக்கள் குறை தீர்க்கும் முகாமினை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவேண்டும் என அமைச்சர் சரோஜா கூறினார்.
வெண்ணந்தூர்,
வெண்ணந்தூர் செங்குந்தர் திருமண மண்டபத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் முதல்-அமைச்சரின் சிறப்பு மக்கள் குறை தீர்க்கும் முகாம் தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) பாலசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது. இந்த முகாமில் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை சமூகநலன் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை அமைச்சர் சரோஜா பெற்றுக்கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது:-
ராசிபுரம் வட்டத்தில் இதுவரை இலவச வீட்டுமனை பட்டா வேண்டி 1,924 மனுக்களும், முதியோர் ஓய்வூதிய தொகை வேண்டி 2,974 மனுக்களும், சாலை வசதி வேண்டி 60 மனுக்களும், குடிநீர் வசதி வேண்டி 51 மனுக்களும், 674 இதர மனுக்கள் என மொத்தம் 5,683 மனுக்கள் வரப்பெற்று இருக்கின்றன.
இந்த மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டு ஒரு மாத கால அளவிற்குள் நலத்திட்டங்கள் வழங்கப்பட உள்ளது. முதல்-அமைச்சரின் சிறப்பு மக்கள் குறை தீர்க்கும் முகாமினை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவேண்டும். இவ்வாறு அமைச்சர் பேசினார்.
நிகழ்ச்சியில் ராசிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி இயக்குனர் தாமோதரன், வெண்ணந்தூர் பேரூராட்சி முன்னாள் தலைவர் எஸ்.என்.கே.பி.செல்வம், வெண்ணந்தூர் வருவாய் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி, வெண்ணந்தூர் பேரூராட்சி செயல் அலுவலர் வனிதா மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் முன்னாள் பிரதிநிதிகள், அரசுத்துறை அலுவலர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story