கடலில் மூழ்கிய 2 மீனவர்களின் உடல்கள் மீட்பு: ராமேசுவரத்தில் மீனவர்கள் போராட்டம் - கலெக்டர் பேச்சுவார்த்தை


கடலில் மூழ்கிய 2 மீனவர்களின் உடல்கள் மீட்பு: ராமேசுவரத்தில் மீனவர்கள் போராட்டம் - கலெக்டர் பேச்சுவார்த்தை
x
தினத்தந்தி 8 Sep 2019 12:00 AM GMT (Updated: 7 Sep 2019 9:28 PM GMT)

கடலில் மூழ்கிய ராமேசுவரம் மீனவர்கள் 2 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், அந்த மீனவர்களின் உறவினர்கள் ராமேசுவரத்தில் சாலை மறியலில் ஈடுபட்டதுடன், பிச்சை எடுக்கும் போராட்டத்தையும் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களிடம் கலெக்டர் வீரராகவராவ் பேச்சுவார்த்தை நடத்தினார்.

ராமேசுவரம்,

ராமேசுவரம் புதுரோடு நடராஜபுரம் பகுதியை சேர்ந்த 10 மீனவர்கள் படகு வாங்கச்சென்று திரும்பியபோது, தஞ்சாவூர் மல்லிபட்டினம் பகுதியில் அவர்களது படகு கடலுக்குள் மூழ்கியது. இதில் 6 மீனவர்கள் மீட்கப்பட்டனர். மீதமுள்ள உமாகாந்ந், இலங்கேசுவரன், மதன், காந்தகுமார் ஆகிய 4 மீனவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்த மீனவர்கள் குறித்து தகவல் தெரியாததால் அவரது உறவினர்கள் மற்றும் அப்பகுதி மீனவர்கள் நேற்று 4-வது நாளாக ராமேசுவரம் தாலுகா அலுவலகம் முன்பாக குவிந்திருந்தனர்.

இந்த நிலையில் திடீரென அவர்கள் ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது மாயமான மீனவர்களின் நிலை குறித்து மாவட்ட கலெக்டர் நேரில் வந்து தெரிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். மேலும் கலெக்டரின் வாகன டீசல் செலவுக்கு பணம் தருவதாகவும், அப்போதாவது அவர் வரவேண்டும் எனக்கூறி மறியலில் ஈடுபட்டவர்களிடம் துண்டை விரித்து பிச்சை எடுக்கும் போராட்டத்தையும் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

அதில் வசூலான பணத்தை தாசில்தாரிடம் மீனவ பெண்கள் கொடுக்க முயன்றனர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய தாசில்தார் அப்துல் ஜப்பார், போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ் ஆகியோர் இதுபற்றி மாவட்ட கலெக்டருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் வந்து கொண்டிருப்பதாகவும் கூறி போராட்டத்தை கைவிடும்படி வலியுறுத்தினர். அதனை தொடர்ந்து அவர்கள் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்று மீண்டும் தாலுகா அலுவலகம் முன்பு அமர்ந்தனர்.

மாலை 4 மணி அளவில் மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ் அங்கு வந்து மாயமான மீனவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது அவர் மீனவர்கள் முன்னிலையில் பேசும்போது கூறியதாவது:-

கடந்த 3-ந்தேதி மல்லிபட்டினம் அருகே படகு கவிழ்ந்து 10 மீனவர்கள் மாயமான தகவல் கிடைத்தவுடன் மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டன. உச்சிப்புளி விமான தளம், மண்டபம் கடலோர காவல் படை, தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மாயமானவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. இதில் 2 மீனவர்களை அப்பகுதியினர் உடனடியாக மீட்டுள்ளனர். 3 ஹெலிகாப்டர்கள், 4 கப்பல்கள் மற்றும் சிறிய படகுகள் மூலம் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்றது. அப்போது மேலும் 4 மீனவர்கள் உயிருடன் மீட்கப்பட்டனர். மற்ற 4 மீனவர்களின் நிலை என்ன என்பது தெரியாமல் இருந்து வந்தது.

இந்த நிலையில் கடலில் மூழ்கி இறந்து போன 2 மீனவர்களின் உடல்களை கடலோர காவல்படையினர் மீட்டுள்ளனர். மேலும் 2 பேரின் நிலைமை என்னவென்று தெரியவில்லை. தேடும் பணி நடைபெறுகிறது. இறந்த மீனவர்களின் குடும்பத்துக்கு மீனவர் நல வாரியம் சார்பில் தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க ஏற்பாடு செய்யப்படும். காற்று அதிகமாக உள்ள நேரத்தில் மீன்துறையினர் அறிவிப்பு செய்திருந்தால் கண்டிப்பாக அந்த காலகட்டத்தில் எந்த மீனவரும் கடலுக்கு செல்லக்கூடாது. இதுபோல அசம்பாவிதம் ஏற்படுவது மிகவும் வேதனைக்குரியது. அதனை உணர்ந்து மீனவர்கள் செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது மீனவர்கள் சங்க தலைவர்கள் அருள், செல்லத்துரை, குமரேசன், கருணாகரன், கருணாமூர்த்தி, சுந்தர்ராஜன், மற்றும் நாசர்கான் ஆகியோர் மாவட்ட கலெக்டரிடம் சில கோரிக்கைகளை தெரிவித்தனர். அதாவது, இறந்த மீனவர்கள் குடும்பத்துக்கு நலவாரிய உதவித்தொகை தவிர முதல்-அமைச்சர் நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.20 லட்சம் நிதி உதவி வழங்க வேண்டும். மேலும் அவர்களது குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். இதையடுத்து இந்த கோரிக்கைகள் குறித்து அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என்றும், அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ் தெரிவித்தார். அப்போது வருவாய் கோட்டாட்சியர் (பொறுப்பு) கோபு, மீன்துறை உதவி இயக்குனர் யுவராஜ் ஆகியோரும் உடனிருந்தனர்.

Next Story