அரசு செட்டாப் பாக்சை செயல்படுத்தாத ஆபரேட்டர்கள் மீது கடும் நடவடிக்கை - கலெக்டர் வீரராகவராவ் எச்சரிக்கை


அரசு செட்டாப் பாக்சை செயல்படுத்தாத ஆபரேட்டர்கள் மீது கடும் நடவடிக்கை - கலெக்டர் வீரராகவராவ் எச்சரிக்கை
x
தினத்தந்தி 8 Sept 2019 4:00 AM IST (Updated: 8 Sept 2019 3:11 AM IST)
t-max-icont-min-icon

அரசு செட்டாப் பாக்சுகளை செயல்படுத்தாத ஆபரேட்டர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் எச்சரித்துள்ளார்.

ராமநாதபுரம்,

மத்திய அரசின் தொலைத்தொடர்பு அமைச்சகம் நாடு முழுவதும் டிஜிட்டல் ஒளிபரப்பு மூலம் மட்டுமே டி.வி. சேனல்களின் ஒளிபரப்பினை கண்டுகளிக்க ஆணையிட்டுள்ளதை தொடர்ந்து நாடு முழுவதும் பழைய முறையிலான “அனலாக்” முறை ஒளிபரப்பு முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் மத்திய அரசுடன் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமத்தினை பெற்று கட்டுப்பாட்டு அறை அமைத்து அனைத்து மாவட்டங்களிலும் பொதுமக்களுக்கு விலையில்லா செட்டாப் பாக்ஸ்களை வழங்கி உயர் தொழில் நுட்பத்தில் துள்ளிய முறையில் டி.வி. நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.

மேலும் மத்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் விதிமுறைகளின்படி “அனலாக்” முறையில் சிக்னலில் ஒளிபரப்பு செய்வது முற்றிலும் தடை செய்யப்பட்டு சட்ட விரோதம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அனலாக் முறையில் ஒளிபரப்பு செய்யும் ஆபரேட்டர்கள் உடனடியாக ஒளிபரப்பை நிறுத்தம் செய்து சந்தாதாரர்களுக்கு டிஜிட்டல் முறையில் மட்டுமே ஒளிபரப்பு செய்ய வேண்டும். மீறினால் சட்டப்படி ஆபரேட்டர்களது ஒளிபரப்பு உபகரணங்களை பறிமுதல் செய்து, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் கேபிள் டி.வி. ஆபரேட்டர், அஞ்சலக உரிமம் ரத்து செய்யப்பட்டு குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தில் செட்டாப் பாக்சுகளை பெற்றுக்கொண்ட ஒரு சில ஆபரேட்டர்கள் அந்த செட்டாப்பாக்சுகளை செயலாக்கம் செய்யாமல் தனியார் நிறுவனங்களிடம் செட்டாப் பாக்சுகளை பெற்று ஒளிபரப்பு செய்து வருகின்றனர். இவர்கள் உடனடியாக அரசு செட்டாப் பாக்சுகளை செயலாக்கம் செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில் காவல் துறை மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பொதுமக்கள் தங்கள் வீடுகளில் அரசால் வழங்கப்பட்ட விலையில்லா செட்டாப் பாக்சுகளை பயன்படுத்தாமல் வைத்திருப்பின் அதனை ஆபரேட்டர்கள் மூலம் செயலாக்கம் செய்ய வேண்டும்.

மேலும் தாங்கள் குடியிருப்பு வீட்டை காலி செய்து விட்டு வேறு பகுதிக்கு சென்றாலோ அல்லது டி.டி.எச். இணைப்பிற்கு மாறினாலோ தாங்கள் பெற்ற அரசு செட்டாப் பாக்சினை ஆபரேட்டரிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும். தவறும்பட்சத்தில் வாடிக்கையாளர்கள் மீது காவல் துறையின் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த தகவலை மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் தெரிவித்தார்.

Next Story