கீழடி அகழ்வாராய்ச்சி பணி - வெங்கடேசன் எம்.பி. ஆய்வு


கீழடி அகழ்வாராய்ச்சி பணி - வெங்கடேசன் எம்.பி. ஆய்வு
x
தினத்தந்தி 8 Sept 2019 4:00 AM IST (Updated: 8 Sept 2019 3:22 AM IST)
t-max-icont-min-icon

திருப்புவனத்தை அடுத்த கீழடியில் நடந்து வரும் அகழ்வாராய்ச்சி பணிகளை வெங்கடேசன் எம்.பி. பார்வையிட்டார்.

திருப்புவனம்,

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகில் உள்ள கீழடி தமிழக தொல்லியல்துறை சார்பில் அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை மதுரை நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் வெங்கடேசன் நேற்று பார்வையிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- கீழடியில் தமிழக தொல்லியல்துறை சார்பில் நடந்து வரும் அகழ்வாராய்ச்சியில் என்னென்ன பொருட்கள் கிடைத்துள்ளது என்பதை தொல்லியலாளர் களிடம் கேட்டுத் தெரிந்துகொண்டேன். தமிழகத்தில் முதல் முறையாக கீழடியில் நவீன தொழில்நுட்பத்தை, கருவிகளை பயன்படுத்தி ஆராய்ச்சிக்கான இடங்களை தேர்வு செய்து பணிகள் நடந்து வருகிறது.

கீழடியில் முதல் 3 கட்டமாக மத்திய தொல்லியல்துறை ஆய்வு செய்தது. தற்போது 4, 5-வது கட்ட ஆராய்ச்சியில் தமிழக தொல்லியல்துறை மிகப்பெரிய கண்டு பிடிப்புகளை செய்திருக்கிறார்கள். அதில் தற்போது 300 மீட்டர் அளவுக்கு தொழிற் கூடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அது ஏறக்குறைய 3 ஆக்கி மைதானம் அளவுக்கு அமைந்துள்ளது. தொழிற்கூடமே இவ்வளவு பெரிய பரப்பளவில் இருந்திருக்கும் போது, மக்களின் வாழிடம், நகரம் இன்னும் விரிவான பரப்பளவில் இருந்திருக்கும். எனவேதான், கீழடி தமிழர்களின் தாய்மடி என்று சொல்லி வருகிறோம்.

மதுரையில் மரபுசார்ந்த அருங்காட்சியகம் அமைக்க வேண்டும். சங்க காலத்திலேயே 3 செ.மீ. உயரத்திற்கு ஒரு மிகச்சிறிய தாழியை செய்திருக்கிறார்கள். விரல் நகம் அளவுக்கு இருக்கும் சூதுபவளத்தில் காட்டுப்பன்றியின் உருவத்தை முத்திரையாக செதுக்கி இருக்கிறார்கள். இந்த பொருட்கள் நம்முடைய கலை மரபு, தொழில்நுட்ப மரபின் உச்சமாக அமைந்துள்ளது. எனவே சர்வதேச தரத்தில் கீழடியில் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும்.

தமிழகத்தைச் சேர்ந்த 30 ஆயிரம் கல்வெட்டுகளின் படிகள் மைசூரில் இருக்கிறது. அதனை தமிழகத்திற்கு கொண்டு வர தமிழக அரசு உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம் மாநிலங்களில் மத்திய தொல்லியல்துறை அலுவலகங்கள் 3 மண்டலமாக அமைந்துள்ளன. ஒரு மண்டலத்திற்கு ரூ.5 கோடி வீதம் மொத்தம் ரூ. 15 கோடி நிதி ஒதுக்குகின்றனர். ஆனால் ஒட்டுமொத்த தமிழகத்தில் ஒரு மண்டலம் மட்டும் உள்ளது. இதனால் சமண படுகைகள் போன்ற தொல்லியல் இடங்களை பாதுகாக்க முடியவில்லை.

எனவே மதுரையை தலைமையாக கொண்டு ஒரு மண்டலமாக பிரித்து, தொல்லியல் இடங்களை பாதுகாக்கவும், வளர்ச்சி சார்ந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இவருடன் சிவகங்கை மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் வீரபாண்டி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் கந்தசாமி, திருப்புவனம் ஒன்றிய செயலாளர் அய்யம்பாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story