ரூ.19 ஆயிரம் கோடியில் 3 புதிய மெட்ரோ ரெயில் திட்டங்கள் தொடக்கம்
ரூ.19 ஆயிரம் கோடியில் 3 புதிய மெட்ரோ வழித்தடங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.
மும்பை,
நாட்டின் நிதிநகரமான மும்பையில் இதுவரை 337 கி.மீ. தூரத்துக்கு 14 மெட்ரோ ரெயில் திட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இதில் புறநகர் காட்கோபர் - வெர்சோவா இடையே மட்டும் தற்போது மெட்ரோ ரெயில் சேவை இயக்கப்பட்டு வருகின்றன.
தகிசர் - டி.என். நகர், டி.என். நகர் - மண்டலா, கொலபா-பாந்திரா-சீப்ஸ், வடலா-காட்கோபர்-காசவர்வடவலி, தகிசர் கிழக்கு - அந்தேரி கிழக்கு உள்ளிட்ட திட்டங்களின் கீழ் மெட்ரோ வழித்தடம் அமைக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், 10, 11 மற்றும் 12-வது மெட்ரோ வழித்தடங்கள் அமைப்பதற்கு மாநில மந்திரி சபை அண்மையில் ஒப்புதல் அளித்தது. இதன்படி 10-வது மெட்ரோ வழித்தடம் ரூ. 4 ஆயிரத்து 476 கோடி செலவில் தானே காய்முக் - மிராரோடு சிவாஜி சவுக் இடையே 9.2 கி.மீ. தூரத்துக்கும், 11-வது மெட்ரோ ரெயில் வழித்தடம் ரூ.8 ஆயிரத்து 739 கோடி செலவில் வடலா - சி.எஸ்.எம்.டி. இடையே 12.8 கி.மீ. தூரத்துக்கு சுரங்கமார்க்கமாவும், 12-வது மெட்ரோ ரெயில் வழித்தடம் ரூ.5 ஆயிரத்து 865 கோடி செலவில் 20.7 கி.மீ. தூரத்துக்கு கல்யாண் - நவிமும்பை தலோஜா இடையேயும் செயல்படுத்தப்படுகிறது.
இந்த மெட்ரோ ரெயில் திட்டங்களுக்கான பூமி பூஜை நேற்று மும்பையில் நடந்தது.
பாந்திரா - குர்லா காம்ப்ளக்சில் உள்ள ஜியோ உலக மைய கட்டிடத்தில் நடந்த இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு மேற்படி மூன்று மெட்ரோ ரெயில் திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார்.
ஆரேகாலனியில் 1 லட்சத்து 14 ஆயிரத்து 88 சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட உள்ள 32 மாடிகள் கொண்ட மெட்ரோ பவனுக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
மும்பை மெட்ரோ ரெயில் திட்டங்கள் குறித்த 'பிராண்ட் விஷன்' ஆவணத்தையும் தொடங்கி வைத்தார்.
மேலும் காந்திவிலியில் 7-வது மெட்ரோ ரெயில் வழித்தடத்தில் உள்ள பான்டோங்கிரி மெட்ரோ ரெயில் நிலையத்தையும் திறந்து வைத்தார்.
விழாவில் கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி, முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story