முழுகொள்ளளவை எட்டியதை தொடர்ந்து கபினி அணையில் எடியூரப்பா சமர்ப்பண பூஜை


முழுகொள்ளளவை எட்டியதை தொடர்ந்து கபினி அணையில் எடியூரப்பா சமர்ப்பண பூஜை
x
தினத்தந்தி 8 Sept 2019 6:00 AM IST (Updated: 8 Sept 2019 4:43 AM IST)
t-max-icont-min-icon

முழு கொள்ளளவை எட்டியதை தொடர்ந்து கபினி அணையில் முதல்-மந்திரி எடியூரப்பா நேற்று சமர்ப்பண பூஜை செய்தார். பின்னர் அவர் கூறுகையில், கபிலா ஆற்றின் குறுக்கே ரூ.20 கோடியில் புதிய பாலம் கட்டப்படும் என்றார்.

மைசூரு, 

கர்நாடகம், தமிழகத்தின் முக்கிய அணைகளாக கிருஷ்ணராஜசாகர் (கே.ஆர்.எஸ்.), கபினி அணைகள் உள்ளன. மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கண்ணம்பாடி கிராமத்தில் உள்ள கே.ஆர்.எஸ்., மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா பீச்சனஹள்ளியில் உள்ள கபினி அணைகளுக்கு, நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததால் நீர்வரத்து அதிகரித்தது. இதனால் இரு அணைகளும் கடந்த மாதம் (ஆகஸ்டு) 12-ந்தேதி முழுகொள்ளளவை எட்டி நிரம்பின. அதாவது 124.80 அடி கொள்ளளவு கொண்ட கே.ஆர்.எஸ். அணை நிரம்பியதை தொடர்ந்து கடந்த 29-ந்தேதி முதல்-மந்திரி எடியூரப்பா அங்கு சென்று சமர்ப்பண பூஜை செய்ததுடன், காவிரி தாய் சிலைக்கும் சிறப்பு பூஜை செய்து வழிபட்டார்.

அதுபோல் நிரம்பி வழியும் கபினி அணையிலும் எடியூரப்பா சமர்ப்பண பூஜை செய்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது தள்ளிப்போய் வந்தது. இந்த நிலையில் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான கேரள மாநிலம் வயநாடு மற்றும் குடகு மாவட்டங்களில் மீண்டும் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் கே.ஆர்.எஸ்., கபினி அணைகள் தொடர்ந்து முழுகொள்ளளவுடன் கடல் போல் காட்சி தருகிறது. இதன் காரணமாக இரு அணைகளில் இருந்தும் தமிழகத்திற்கு அதிகளவு தண்ணீர் திறந்துவிடப்பட்டு வருகிறது. இதன்தொடர்ச்சியாக காவிரி, கபிலா ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் முதல்-மந்திரி எடியூரப்பா பெங்களூருவில் இருந்து ஹெலிகாப்டரில் மைசூரு மாவட்டம் பீச்சனஹள்ளியில் அமைக்கப்பட்டிருந்த ஹெலிபேடு மைதானத்தில் வந்திறங்கினார். பின்னர் அங்கிருந்து அவர் பீச்சனஹள்ளியில் உள்ள கபினி அணைக்கட்டுக்கு சென்றார். அங்கு அவர், நடப்பு ஆண்டில் அணை நிரம்பியதால் வருணபகவானுக்கு நன்றி தெரிவித்தும், விவசாயம் செழிக்க வேண்டியும் சமர்ப்பண பூஜை செய்தார்.

அதாவது, நவ தானியங்கள், வெற்றிலை, பாக்கு, பழம், பூக்கள், புதுத்துணி, மஞ்சள், குங்குமம், வளையல்கள் உள்ளிட்ட மங்கல பொருட்களை ஒரு முறத்தில் வைத்து கட்டி அணை நீரில் எடியூரப்பா போட்டு சமர்ப்பணம் செய்து வழிபட்டார். அப்போது அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் முழங்கினர்.

இந்த நிகழ்ச்சியில், மாநில வீட்டு வசதி வாரியத் துறை மந்திரி வி.சோமண்ணா, போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை, சீனிவாஸ் பிரசாத் எம்.பி., எம்.எல்.ஏ. அனில் சிக்கமாது, கலெக்டர் அபிராம் ஜி.சங்கர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

அதன் பின்னர் எடியூரப்பா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தாமதமாக தொடங்கினாலும், நல்ல மழை பெய்துள்ளது. இதனால் அணைகள் நிரம்பியுள்ளன. கபினி அணையின் முன்பகுதியில் சிறிய பூங்கா உள்ளது. இந்த பூங்காவை கே.ஆர்.எஸ். அணையில் உள்ள பிருந்தாவன் கார்டன் பூங்கா மாதிரி மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். அதுபோல் கபினி அணையில் இருந்து வெளியேறும் நீர் கபிலா ஆற்றில் பாய்ந்தோடி வருகிறது. இந்த ஆற்றின் குறுக்கே உள்ள பாலம் தாழ்வாக இருப்பதால், வெள்ளம் ஏற்படும் போது நீரில் மூழ்கிவிடுகிறது. இதனால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

இதனை கருத்தில்கொண்டு அந்த பாலத்திற்கு பதிலாக புதியதாக ரூ.20 கோடி செலவில் பாலம் அமைக்கப்படும். இதற்கான நிதி விரைவில் ஒதுக்கப்படும். எச்.டி.கோட்டை தாலுகாவில் இருந்து சரகூறு பிரிக்கப்பட்டு தனிதாலுகாவாக மாறி 5 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் இந்த தாலுகாவுக்கு நிரந்தரமாக யாரும் இதுவரை ஒரு ஆண்டுக்கு மேல் தாசில்தாராக இருக்கவில்லை. சரகூறு தாசில்தாராக பதவி ஏற்பவர்கள் 5, 6 மாதங்களில் பணி இடமாறுதல் வாங்கி சென்றுவிடுகிறார்கள். இதனால் சரகூறு தாலுகா மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். எனவே, சரகூறு தாலுகாவுக்கு 3 அல்லது 4 ஆண்டுகள் அங்கேயே பணியாற்றும்படி விரைவில் தாசில்தார் நியமிக்கப்படுவார்.

கர்நாடகத்தில் வளர்ச்சிப் பணிகள் நடக்காமல் இருப்பதாக நீங்கள் (நிருபர்கள்) கூறியுள்ளர்கள். இதற்கு காரணம் டெண்டர் எடுத்தவர்கள் அலட்சியமாக செயல்படுவது தான். இதுதொடர்பாக அனைத்து துறை அதிகாரிகளுடன் விரைவில் ஆலோசனை கூட்டம் நடத்தி, வளர்ச்சிப் பணிகளை விரைந்து முடிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் எச்.டி.கோட்டையில் கபினி அணை அருகில் உள்ள நுகு, தாரகா ஆகிய அணைகளும் நிரம்பியுள்ளன. அந்த அணைகளில் மந்திரி வி.சோமண்ணா சமர்ப்பண பூஜை செய்து வழிபட்டார். எடியூரப்பா வருகையையொட்டி கபினி அணைப் பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. 

Next Story