கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி வாலிபர் சாவு - பிறந்த நாளன்று சோகம்
திருநின்றவூரில் பிறந்த நாளன்று சாமியாரிடம் ஆசி பெறச்சென்ற போது கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த வாலிபர் விஷவாயு தாக்கி பரிதாபமாக இறந்தார்.
ஆவடி,
திருவள்ளூரை அடுத்த பேரத்தூர் மாந்திப்பை பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் முனுசாமி. இவரது மகன் சம்பத்குமார் (வயது 24). எம்.பி.ஏ. படித்து விட்டு சென்னை வேளச்சேரி பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவருக்கு நேற்று முன்தினம் பிறந்தநாள். இதையொட்டி இரவு 7 மணியளவில் திருவள்ளூரை அடுத்த திருநின்றவூர் ஓம்சக்தி நகரில் வசித்து வரும் சந்தானம் குருஜி என்ற சாமியாரை சந்தித்து ஆசி பெற சென்றார். கோவிலுக்கு செல்லும் போது ஏற்பட்ட பழக்கத்தில் சாமியாரை சந்திக்க சென்றுள்ளார்.
அவருடன் அதே பகுதியை சேர்ந்த நரேந்திரன் (32) என்பவரும் சென்றார். அப்போது சாமியார், தனது வீட்டில் உள்ள கழிவு நீர் கால்வாயில் அடிக்கடி அடைப்பு ஏற்படுகிறது, அதில் உள்ள அடைப்பை சரி செய்ய வேண்டும் என்று கூறியதாக தெரிகிறது.
அவருக்கு உதவ வேண்டும் என்பதற்காக கழிவு நீர் தொட்டியில் நரேந்திரன் இறங்கி சுத்தம் செய்து கொண்டார். அப்போது திடீரென விஷவாயு தாக்கி நரேந்திரனுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. உடனே அவரை காப்பாற்ற சம்பத்குமார் கழிவுநீர் தொட்டியில் இறங்கினார். அவரையும் விஷவாயு தாக்கியது. இதில் மூச்சு திணறல் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே சம்பத்குமார் இறந்தார்.
சுய நினைவின்றி இருந்த நரேந்திரனை அங்கு இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து திருநின்றவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தனது பிறந்த நாளில் சாமியாரிடம் ஆசி வாங்க சென்ற சம்பத்குமார் சாமியார் வீட்டில் கழிவுநீர் தொட்டியில் இறங்கியபோது விஷவாயு தாக்கி பரிதாபமாக இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story