கோவையில், ஆயுதங்களுடன் பிறந்தநாள் கொண்டாடிய மேலும் 3 ரவுடிகள் கைது - கத்தி, வீச்சரிவாள்கள் பறிமுதல்


கோவையில், ஆயுதங்களுடன் பிறந்தநாள் கொண்டாடிய மேலும் 3 ரவுடிகள் கைது - கத்தி, வீச்சரிவாள்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 9 Sept 2019 4:15 AM IST (Updated: 9 Sept 2019 12:56 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் கத்தி, வீச்சரிவாள்களுடன் பிறந்தநாள் கொண்டாடிய மேலும் 3 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.

கோவை,

கோவை சரவணம்பட்டி சிவானந்தபுரம் பகுதியில் ரவுடிகள் சிலர் கத்தி, வீச்சரிவாள் களை வைத்து கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படமும், வீடியோவும் கடந்த சில நாட்களுக்கு முன்பு சமூகவலைதளங்களில் வெளியானது.

இது குறித்து தகவல் அறிந்த சரவணம்பட்டி போலீசார் அந்த காட்சிகளை ஆய்வு செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சதீஷ்குமார் (வயது34), சுந்தர் (48) ஆகிய 2 ரவுடிகளை கைது செய்தனர். 3 பேர் தலைமறைவாகிவிட்டனர். அவர்களை பிடிக்க சரவணம்பட்டி இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினார்.

அதனைத்தொடர்ந்து தலைமறைவாகியிருந்த சிவானந்தபுரத்தைச் சேர்ந்த தங்கராஜின் மகன் கனி என்ற அமுதன் (36), விளாங்குறிச்சியைச் சேர்ந்த ஜெகநாதனின் மகன் ராஜரத்தினம் (40), சிவானந்தபுரத்தைச் சேர்ந்த மாரியப்பனின் மகன் சூரியமகேஸ்வரன் (28) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பிடிபட்ட கனி ஆட்டோ டிரைவராகவும், ராஜரத்தினம் பெயிண்டராகவும், சூரிய மகேஸ்வரன் எலெக்டிரீசியனாகவும் வேலை செய்து வந்தனர். இவர்கள் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் உள்ளன.

கைதான கனி போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில், கடந்த ஜூலை 30-ந் தேதி எங்களுடைய கூட்டாளி சூரியமகேஸ்வரனுக்கு பிறந்தநாள் கொண்டாடினோம். அப்போது எங்களிடம் இருந்த வீச்சரிவாள்களை தூக்கிப்பிடித்தவாறு புகைப்படம் எடுத்துக்கொண்டோம். இந்த படங்கள் எங்களுக்குத் தெரியாமலேயே சமூகவலைதளங்களில் வெளியானது என்று தெரிவித்தார்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் இவர்கள் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட பயன்படுத்திய கத்தி மற்றும் வீச்சரிவாள்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இவர்கள் மீது பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அபாயகரமான ஆயுதங்களை வைத்து இருந்தல் உள்ளிட்ட பல்வேறு சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Next Story