அம்பை, களக்காடு பகுதிகளில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்
அம்பை, களக்காடு, சேரன்மாதேவி பகுதிகளில் நேற்று விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடந்தது.
அம்பை,
நாடு முழுவதும் கடந்த 2-ந் தேதி விநாயகர் சதுர்த்தி விழா வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது. அதனை முன்னிட்டு நெல்லை மாவட்டம் அம்பை, சாட்டு பத்து, மன்னார் கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இந்து முன்னணி சார்பில், ஏராளமான விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டு வந்தன.
அந்த சிலைகள் நேற்று அம்பை கிருஷ்ணன் கோவில் திடலில் இருந்து ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு பாபநாசம் ஆற்றில் விஜர்சனம் செய்யப்பட்டன. கல்லிடைக்குறிச்சி பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகளும் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு பாபநாசம் ஆற்றில் விஜர்சனம் செய்யப்பட்டன. இதில் இந்து முன்னணி மாவட்ட துணை தலைவர் பால்ராஜ், மாவட்ட செயலாளர் ஜெயபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் களக்காடு, சிதம்பரபுரம், சிங்கிகுளம், மாவடி உள்ளிட்ட பகுதிகளில் 34 இடங்களில் விஸ்வ ஹிந்து பரிசத் சார்பில், விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டு வந்தன. நேற்று அந்த சிலைகள் அனைத்தும் களக்காடு சத்தியவாகீஸ்வரர், கோமதி அம்பாள் கோவில் முன்பு கொண்டு வரப்பட்டது. பின்னர் அங்கிருந்து சிலைகள் ஊர்வலமாக புறப்பட்டு உவரி கடலில் விஜர்சனம் செய்யப்பட்டன. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
சேரன்மாதேவி பஸ்நிலையம் அருகே உள்ள வைத்தியநாதசுவாமி கோவில் முன்பு விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டு வந்தன. நேற்று அந்த சிலை ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. பரத்வாஜ் ஆசிரம நிர்வாகி நிர்மலானந்த சுவாமிகள் கொடியசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். அந்த சிலை பாபநாசம் ஆற்றில் விஜர்சனம் செய்யப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story