லாபத்தில் இயங்க நடவடிக்கை எடுத்து சேலம் உருக்காலை தொழிலாளர்களின் நலன் பாதுகாக்கப்படும் - வானதி சீனிவாசன் பேட்டி


லாபத்தில் இயங்க நடவடிக்கை எடுத்து சேலம் உருக்காலை தொழிலாளர்களின் நலன் பாதுகாக்கப்படும் - வானதி சீனிவாசன் பேட்டி
x
தினத்தந்தி 9 Sept 2019 4:00 AM IST (Updated: 9 Sept 2019 1:58 AM IST)
t-max-icont-min-icon

சேலம் உருக்காலையை லாபத்தில் இயங்க நடவடிக்கை எடுத்து தொழிலாளர்களின் நலன் பாதுகாக்கப்படும் என்று பா.ஜனதா கட்சி மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் கூறினார்.

சேலம், 

சேலம் உருக்காலையை தனியார் மயமாக்குவதை கண்டித்து தொழிலாளர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு பல்வேறு அமைப்புகள், அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. உருக்காலையை டெண்டர் எடுப்பதற்காக ஆலையை பார்வையிட வரும் தனியார் நிறுவனங்களை தடுக்க அனைத்து தொழிற்சங்கத்தினர் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடந்து வருகிறது.

இந்த போராட்டத்தின் 35-வது நாளான நேற்று பா.ஜனதா கட்சி மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் கலந்து கொண்டு உருக்காலை தொழிலாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, உருக்காலையை லாபத்தில் இயங்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக கூறினார்.

இதைத்தொடர்ந்து வானதி சீனிவாசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

நாடு முழுவதும் நஷ்டத்தில் இயங்கி வரும் பொதுத்துறை நிறுவனங்களை லாபகரமாக மாற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேபோல், சேலம் உருக்காலையை நஷ்டத்தில் இருந்து மாற்றி லாபத்தில் இயங்க நடவடிக்கை எடுத்து தொழிலாளர்களின் நலன் பாதுகாக்கப்படும்.

ஏற்கனவே மத்திய மந்திரி தர்மேந்திர பிரதானை சந்தித்து சேலம் உருக்காலையை லாபகரமாக இயக்க வலியுறுத்தி உள்ளோம். இதனை தொடர்ந்து மூலப்பொருட்களின் விலையை குறைத்தது உள்பட பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

தமிழக தொழில்துறை அமைச்சர் சம்பத்திடம், உருக்காலை பங்குகளை பெற்று கொள்ளுமாறு வலியுறுத்தி வருகிறோம். அவர், பங்குகளை வாங்கும் அளவுக்கு நிதி அரசிடம் உள்ளதா? என முதல்-அமைச்சரிடம் ஆலோசித்து சொல்வதாக தெரிவித்துள்ளார்.

சேலம் உருக்காலையில் பணிபுரிந்து வரும் தொழிலாளர்களில் ஒருவர் கூட வேலை இழக்காமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதேநேரத்தில், தனியாருக்கு விற்பனை செய்வதற்காக அறிவிக்கப்பட்டுள்ள டெண்டரை திரும்ப பெற பா.ஜனதா கட்சி சார்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது. உருக்காலை நிர்வாகத்தில் ரூ.2,300 கோடி முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு உள்ளதே தவிர, அதற்கான ஆதாரத்தை தெரிவித்தால் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்படும். தமிழகத் தில் பா.ஜ.க. கால் ஊன்ற முடியாது என சொல்லி வந்த நிலையில், யார் பா.ஜ.க. தலைவர்? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதுவே பா.ஜ.க. வளர்ந்துள்ளதை காட்டுகிறது. கேந்திரிய வித்யாலயா பள்ளி குறித்து தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் கூறிய கருத்துகள் ஆதாரமற்றவை ஆகும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story