வாக்காளர் சரிபார்ப்பு திட்டம் குறித்து பொது சேவை மைய கிராமப்புற தொழில் முனைவோருக்கு பயிற்சி - கலெக்டர் பிரபாகர் தலைமையில் நடந்தது
கிருஷ்ணகிரியில் வாக்காளர் சரிபார்ப்பு திட்டம் குறித்து பொது சேவை மைய கிராமப்புற தொழில் முனைவோருக்கான பயிற்சி கலெக்டர் பிரபாகர் தலைமையில் நடந்தது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், வாக்காளர் சரிபார்ப்பு திட்டம் குறித்து பொதுசேவை மைய கிராமப்புற தொழில் முனைவோருக்கு ஒருநாள் பயிற்சி முகாம் நடந்தது. இந்த பயிற்சி முகாமை மாவட்ட கலெக்டர் பிரபாகர் தலைமை தாங்கி தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:- இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, வாக்காளர் சரிபார்ப்பு திட்டம் கடந்த 1-ந் தேதி தொடங்கி வருகிற அக்டோபர் மாதம் 15-ந் தேதி வரை நடைபெற உள்ளது. மாவட்டத்தில் உள்ள பொதுசேவை மையங்களில் வாக்காளர்கள் தங்கள் வாக்காளர் பட்டியலில் உள்ள விவரங்களை சரிபார்த்து, பிழை இருந்தால் திருத்தம் செய்யும் வசதி செய்யப்பட்டுள்ளது.
வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் பதிவாகி இருக்கும் பிறந்த தேதி, பெயர், உறவுமுறை, புகைப்படம், பாலினம் உள்ளிட்டவை சரியாக இருக்கிறதா? என்பதை சரிபார்த்து, திருத்தம் செய்து கொள்ளலாம். பொதுமக்கள் தங்கள் கிராமத்தில் உள்ள பொதுசேவை மையத்தினை அணுகி, வாக்காளர் விவரங்களை சரிபார்த்து பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த வாய்ப்பினை வாக்காளர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதற்கு பொதுசேவை மையத்தினர் உரிய ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ராமமூர்த்தி, தேர்தல் தாசில்தார் ராமச்சந்திரன் மற்றும் துணை தாசில்தார்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story