பாலக்கோடு அருகே, ரூ.27¾ லட்சம் கையாடல் செய்ததாக ஊராட்சி செயலாளர் கைது
பாலக்கோடு அருகே ஊராட்சி நிதியில் ரூ.27¾ லட்சத்தை கையாடல் செய்ததாக ஊராட்சி செயலாளரை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
தர்மபுரி,
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள திருமல்வாடியை சேர்ந்தவர் வீரமணி (வயது 44). இவர் பெலமாரனஅள்ளி ஊராட்சி செயலாளராக பணியாற்றி வந்தார். இந்தநிலையில் அந்த ஊராட்சியில் பல்வேறு முறைகேடு நடப்பதாக மாவட்ட நிர்வாகத்திற்கு புகார்கள் வந்தன. இதுதொடர்பாக விசாரணை நடத்த மாவட்ட கலெக்டர் மலர்விழி உத்தரவிட்டார்.
அதன்பேரில் பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவலர் கவுரி தலைமையில் அதிகாரிகள் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு சென்று நிதி தொடர்பாக தணிக்கை செய்தனர். மேலும் ஊராட்சியில் நடைபெற்ற திட்டப்பணிகள் குறித்து அவர்கள் ஆய்வு செய்தனர். அப்போது ஊராட்சி செயலாளர் வீரமணி ஊராட்சிக்கு ஒதுக்கப்பட்ட நிதி ரூ.27 லட்சத்து 78 ஆயிரத்து 656 தன்னுடைய வங்கி கணக்கில் செலுத்தி கையாடல் செய்தது தெரியவந்தது.
இதையடுத்து வட்டார வளர்ச்சி அலுவலர் கவுரி தர்மபுரி மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் அரசு நிதியை கையாடல் செய்ததாக ஊராட்சி செயலாளர் வீரமணி மீது புகார் அளித்தார். அதன்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வீரமணியை கைது செய்தனர். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஊராட்சி செயலாளர் வீரமணி ஏற்கனவே ஊராட்சியில் நிதி முறைகேடு செய்ததாக 2 ஆண்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் பாலக்கோடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story