தண்ணீர் வரத்து அதிகரிப்பு: திருமலைராஜன் ஆற்றில் தற்காலிக பாலம் உடைந்தது - கிராம மக்கள் அவதி
திருமலைராஜன் ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரிப்பால் தற்காலிக பாலம் உடைந்தது. இதனால் கிராம மக்கள் அவதிப்பட்டு வருகிறார் கள்.
கபிஸ்தலம்,
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உத்தாணி- சுந்தரபெருமாள்கோவில் இடையே திருமலை ராஜன் ஆற்றில் ரூ.2 கோடியே 10 லட்சம் செலவில் புதிய பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
இதையொட்டி பழையபாலம் அகற்றப்பட்டுள்ளது. இதனால் ஆற்றின் நடுவே போக்குவரத்துக்கு வசதியாக தற்காலிக பாலம் அமைக்கப்பட்டது. ஆற்றின் குறுக்கே ராட்சத குழாய்கள் மற்றும் மணல் மூட்டைகளை கொண்டு தற்காலிக பாலம் அமைக்கப்பட்டது. இந்த பாலத்தை நெடுஞ்சாலைத்துறை அமைத்து இருந்தனர். ஆற்றில் தண்ணீர் வரத்து இருந்த நிலையில் அமைக்கப்பட்ட தற்காலிக பாலம் கிராம மக்களுக்கு பயனுள்ளதாக இருந்து வந்தது. இதன் மூலம் உத்தாணி, சுந்தரபெருமாள் கோவில், நல்லூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் சிரமமின்றி ஆற்றை கடந்தனர்.
இந்த நிலையில் திருமலை ராஜன் ஆற்றில் நேற்றுமுன் தினம் இரவு தண்ணீரின் வரத்து திடீரென அதிகரித்ததால் தற்காலிக பாலம் உடைந்தது. இதன் காரணமாக 6-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். கிராம மக்கள் சுந்தர பெருமாள்கோவில் செல்ல 3 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தற்காலிக பாலத்தை உடனடியாக சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
Related Tags :
Next Story