மேட்டூரில் இருந்து அதிக அளவில் தண்ணீர் திறக்க வாய்ப்பு: காவிரி, கொள்ளிட கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - கலெக்டர் வேண்டுகோள்


மேட்டூரில் இருந்து அதிக அளவில் தண்ணீர் திறக்க வாய்ப்பு: காவிரி, கொள்ளிட கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - கலெக்டர் வேண்டுகோள்
x
தினத்தந்தி 9 Sept 2019 4:00 AM IST (Updated: 9 Sept 2019 1:59 AM IST)
t-max-icont-min-icon

மேட்டூரில் இருந்து அதிக அளவு தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளதால் காவிரி, கொள்ளிட கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று தஞ்சை கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார். தஞ்சை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தஞ்சாவூர்,

கர்நாடகாவில் பெய்து வரும் மழை காரணமாக, மேட்டூர் அணைக்கு அதிகளவில் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் தஞ்சை மாவட்டத்தில் காவிரி, கொள்ளிடம் மற்றும் அதன் கிளை ஆறுகளின் கரையோரங்களில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

தஞ்சை மாவட்டத்தில் காவிரி நீர் பாயும் ஆறுகள், குளங்கள் மற்றும் நீர்நிலை பகுதிகளிலும், தண்ணீர் வரத்து அதிகமாக உள்ள அபாயகரமான இடங்களிலும் பொது மக்கள் குளித்தல், நீச்சல் அடித்தல், மீன் பிடித்தல், புகைப்படம் எடுத்தல் மற்றும் இதர பொழுது போக்கு நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். ஆறுகள், கால்வாய்கள், வாய்க்கால்கள் மற்றும் நீர் நிலைகளில் அதிக அளவில் தண்ணீர் திறக்கப்பட வாய்ப்புள்ளதால், நீர்நிலை அருகாமையில் குழந்தைகள் விளையாட செல்லாமல் பெற்றோர்கள் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.

விவசாயிகள் தங்களது கால்நடைகளை நீர்நிலைகள் வழியாக அழைத்து செல்வதை தவிர்க்க வேண்டும். நீர்நிலைகளில் உள்ள பள்ளங்களை முன்னதாகவே தெரிந்து கொண்டு முன்னெச்சரிக்கையோடு பயன்படுத்த வேண்டும். தண்ணீர் திறந்து விடப்படும் கன அடி அளவு குறித்த விவரங்களை அவ்வப்போது தெரிந்து கொள்ள வேண்டும். கரையோரப்பகுதிகளில் வசிக்கும் பொது மக்களுக்கு தண்டோரா மற்றும் ஒலிபெருக்கி மூலமாக எச்சரிக்கை செய்ய வருவாய்த்துறை, காவல்துறை, ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story