வேலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 20 போலி டாக்டர்கள் கைது - கலெக்டர் தலைமையில் நடந்த சோதனையில் அதிரடி
வேலூர் மாவட்டத்தில் கலெக்டர் சண்முகசுந்தரம் தலைமையில் ஒரே நாளில் நடந்த சோதனையில் 20 போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் பலர் தேடப்பட்டு வருகின்றனர்.
வேலூர்,
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்.படிக்காமல் மருந்துக்கடையில் வேலைபார்த்த அனுபவத்தை கொண்டு பலர் டாக்டர் என கூறி பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் ஓமியோபதி மற்றும் மருத்துவ துணைபடிப்புகளை படித்து விட்டும் டாக்டர் என கூறி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கின்றனர். ஓமியோபதி படித்தவர்கள் அந்த முறையில் சிகிச்சை அளிக்காமல் ஆங்கில முறையில் மருந்தின் தன்மை தெரியாமல் சிகிச்சை அளிக்கின்றனர். இவர்களது சிகிச்சையில் பலர் உயிரிழந்துள்ளனர்.
இவர்கள் முறையாக படிக்காமல் பரிந்துரை செய்யும் மருந்து, மாத்திரைகளால் நோயாளிகளுக்கு நோயின் தன்மை தீவிரம் அடைவதோடு உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. தற்போது மர்ம காய்ச்சல் பரவுவதாக கூறப்படும் நிலையில் பலர் இதுபோன்ற போலி டாக்டர்களை நாடிச்செல்கின்றனர். அவர்களுக்கு காய்ச்சல் குணமாகாததோடு தீவிரம் அடைந்து உயிருக்கே ஆபத்து ஏற்படுகிறது.
இந்த நிலையில் வேலூர் மாவட்டத்தில் போலி டாக்டர்கள் அதிகரித்து வருவதாகவும், அவர்களது முறையற்ற சிகிச்சையால் பலருக்கு நோயின் தன்மை அதிகரித்து பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கலெக்டர் சண்முகசுந்தரம், போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் மற்றும் சுகாதாரத்துறை இணை இயக்குனர் யாஸ்மின் ஆகியோருக்கு புகார்கள் சென்றன. புகார்களில் தொடர்புடைய போலி டாக்டர்கள் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டனர்.
இதனை தொடர்ந்து போலி டாக்டர்களை பிடிக்க கலெக்டர் சண்முகசுந்தரம், போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார், மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் யாஸ்மின் ஆகியோர் தலைமையில் நேற்று முன்தினம் 35 குழுக்கள் அமைக்கப்பட்டன.
அந்த குழுக்களில் ஒரு டாக்டர், ஒரு மருந்தாளுனர், ஒரு துணை போலீஸ் சூப்பிரண்டு, ஒரு சப்-இன்ஸ்பெக்டர், தலா ஒரு ஆண் பெண் காவலர்கள் ஆகியோர் இடம் பெற்றனர். அவர்கள் நேற்று அதிகாலை 5 மணிக்கு அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களுக்கு சோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். திருப்பத்தூர், திம்மாம்பேட்டை, ராணிப்பேட்டை, வாலாஜா, பனப்பாக்கம், குடியாத்தம் போன்ற 50 இடங்களில் இக்குழுவினர் சம்மந்தப்பட்ட கிளினிக்குகள், மருத்துவமனைகளுக்குள் அதிரடியாக நுழைந்து ஆய்வு செய்தனர்.
அப்போது டாக்டர் முறையாக மருத்துவம் படித்தவரா? என விசாரணை மேற்கொண்டனர். இந்த சோதனையில் திருப்பத்தூர் அவுசிங்போர்டு பகுதியில் மளிகைக்கடையுடன் கிளினிக் நடத்தி வந்த குலசேகரன் (வயது 42), ஓய்வு பெற்ற சுகாதார ஆய்வாளர் சத்தியநாராயணன் (71), தோரணம்பதியில் கிளினிக் நடத்தும் பெருமாண்டபதியை சேர்ந்த மாது (49), பனப்பாக்கத்தை சேர்ந்த அருள்தாஸ் (48), ஜெயபால் (65), பரதராமியில் கிளினிக் நடத்தி வரும் ஆந்திர மாநிலம் காசிராலா பகுதியை சேர்ந்த துரைசாமி (69), பூஜாரிப்பல்லியை சேர்ந்த மோகன்சுப்பாகர் (69), சீனிவாசலு (57), ரமணப்பா (53), வாணியம்பாடி ஆவாரங்குப்பத்தை சேர்ந்த சண்முகசுந்தரம், யுவராஜ், மோகன்ராஜ், ஆம்பூர் மாச்சம்பட்டு பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் (44), பேரணாம்பட்டு அருகே அழிஞ்சி குப்பத்தில் வீட்டிலேயே கிளினிக் நடத்தி வந்த குப்புசாமி (46) உள்பட 20 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து மருந்து, மாத்திரைகள், ஊசிகள் மற்றும் சில மருத்துவசாதனங்கள் கைப்பற்றப்பட்டன.
சோதனை நடப்பதை அறிந்த பல போலி டாக்டர்கள் தப்பி ஓடி தலைமறைவாகிவிட்டனர். அவர்களை குழுவினர் தேடி வருகின்றனர்.
சோதனை குறித்து சுகாதாரத்துறை இணை இயக்குனர் யாஸ்மின் கூறுகையில், “நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனை அல்லது அங்கீகாரம் பெற்ற தனியார் மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றால் நோய் குணமாகும். ஆனால் எம்.பி.பி.எஸ்.படிக்காமல் குறைந்த கட்டணத்தில் சிகிச்சை அளிப்பதாக கூறும் போலி டாக்டர்களிடம் சென்றால் நோய் பாதிப்பு அதிகமாகி விடும். எனவே போலி டாக்டர்களிடம் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
எங்களது சோதனையில் 20 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து மருந்து, மாத்திரை போன்றவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சிலர் தப்பிச் சென்றுள்ளனர். தலைமறைவாக உள்ள அவர்களை தேடி வருகிறோம். கைது எண்ணிக்கை உயர வாய்ப்புள்ளது” என்றார்.
Related Tags :
Next Story