ஐகோர்ட்டு தலைமை நீதிபதி இடமாற்றம் மரபு மீறிய செயல் - கே.எஸ்.அழகிரி கண்டனம்


ஐகோர்ட்டு தலைமை நீதிபதி இடமாற்றம் மரபு மீறிய செயல் - கே.எஸ்.அழகிரி கண்டனம்
x
தினத்தந்தி 9 Sept 2019 4:30 AM IST (Updated: 9 Sept 2019 2:53 AM IST)
t-max-icont-min-icon

சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி இடமாற்றம் செய்யப்பட்டது மரபு மீறிய செயல் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம்,

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி ராமநாதபுரத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:- சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி தஹில்ரமானி பதவி விலகியது வருத்த மளிக்கிறது. அரசின் தன்னாட்சி அமைப்புகளில் பணியாற்றும் அதிகாரிகள், நீதிபதிகள், உயர்பொறுப்பு வகிப்பவர்கள் பதவி விலகி வருவது வருத்தத்திற்குரியது. ஏற்கனவே, ரிசர்வ் வங்கி கவர்னர்கள், தகவல்உரிமை சட்ட அதிகாரிகள் சி.பி.ஐ. இயக்குனர்கள் போன்றவர்கள் இதேபோல, பதவியில் இருந்து விலகினார்கள்.

அரசின் நிதித்துறை, நீதித்துறை, நிர்வாகத்துறையில் பணிபுரியும் நேர்மையான அதிகாரிகளின் கைகள் கட்டப்பட்டு வாய்கள் மூடப்படுகிறது. இவ்வாறு ஜனநாயகத்தின் சிறகு உடைக்கப்படுகிறது. சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியின் இடமாற்றம் வழக்கமான மரபை மீறிய செயல். தனது சுயமரியாதையை விட்டுத்தர முடியாததால் தஹில்ரமானி ராஜினாமா செய்துள்ளார். இதுபோன்ற சம்பவங்கள் தொடர்வது மக்களாட்சிக்கும், ஜனநாயகத்திற்கும் எதிரானது.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒரேநேரத்தில் வெளிநாட்டு சுற்றுப்பயணம் செல்வது நல்ல முன் மாதிரி அல்ல. தமிழ்நாட்டில் நிர்வாகம் என்ற ஒன்று இருப்பதாக தெரியவில்லை. காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு ஒரு ஆதாரம் கூட இல்லை. அவரது கைதுக்கு காங்கிரஸ் கட்சியின் அனைத்து தலைவர்களும் ஒருமித்த குரலில் எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம். கட்சிக்குள் பிளவு ஏற்படுத்துபவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். ரஜினி அரசியலுக்கு வரும்போது பார்ப்போம். ஒருவேளை அவர் பா.ஜ.க.வில் இணைந்தாலும் அல்லது தனிக்கட்சி தொடங்கினாலும் காங்கிரசுக்கு எந்த பாதிப்பும் இல்லை.

தமிழகம் முழுவதும் குடிமராமத்து பணிகள் சரியாக நடைபெறவில்லை. பதிவு செய்யப்பட்ட விவசாய சங்கத்தினர் மூலம் இந்த பணிகளை மேற்கொள்ள வேண்டும். காங்கிரஸ் சார்பில் தமிழகம் முழுவதும் 28 ஏரிகளை தூர்வாரி சீரமைத்து உள்ளோம்.

மத்திய பா.ஜ.க. அரசு பதவி ஏற்று கடந்த 100 நாளில் பரிதாபகரமான தோல்வியை சந்தித்துள்ளது. எந்த துறையிலும் சிறு முன்னேற்றம் கூட அடையவில்லை. காங்கிரஸ் காலத்தில் 9 சதவீதமாக இருந்த வளர்ச்சி விகிதம் தற்போது 5 சதவீதமாக குறைந்துள்ளது. ஆட்டோ மொபைல் துறையில் பல லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர். பணமதிப்பிழப்பு நீக்க நடவடிக்கையின் பாதிப்பு 3 ஆண்டுகளுக்கு பின்பு இப்போது கடுமையாக எதிரொலித்துள்ளது. காஷ்மீரில் அமைதியை நிலைநாட்ட முடியாமல் நிலைமையை மேலும் சிக்கலாக்கி உள்ளனர். காஷ்மீருக்கு ஏற்பட்ட நிலை தமிழகம், கேரளாவிற்கும் வரக்கூடிய ஆபத்து உள்ளது. சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் தாழ்த்தப்பட்டவர்களை பற்றி சர்ச்சைக்குரிய கருத்து இடம்பெற்றுள்ளது. கல்வித்துறையை தவறான பாதைக்குஅழைத்து செல்லக்கூடியது. இவ்வாறு கூறினார். பேட்டியின்போது செயல்தலைவர் மயூரா ஜெயக்குமார், முதுகுளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மலேசியாபாண்டியன், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் செல்லத்துரை அப்துல்லா ஆகியோர் உடன் இருந்தனர்.

இதனை தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் ரமேஷ்பாபு ஏற்பாட்டின் பேரில் திருப்புல்லாணியில் உள்ள செட்டியார் ஊருணி தூர்வாரப்பட்டுள்ளது. ஊருணியை பொதுமக்களுக்கு அர்ப்பணிக்கும் விழா மற்றும் ராஜிவ்காந்தி பிறந்தநாளையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா செயல்தலைவர் மயூரா ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது. ரமேஷ்பாபு வரவேற்றார். இதில் மாநில ஒருங்கிணைப்பாளர் செங்கம் குமார், மாவட்ட துணைத்தலைவர் முத்துக்கிருஷ்ணன், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் செந்தாமரை கண்ணன், வரதராஜன், நகர் தலைவர் கோபி, வட்டார தலைவர் சேதுபாண்டியன், கவுசி மகாலிங்கம், சேமனூர் ராஜேந்திரன், காவனூர் கருப்பையா, துல்கீப்கான், முன்னாள் மாவட்ட தலைவர் விக்டர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story