தொண்டை அடைப்பான் நோய்க்கு தடுப்பூசி போட்டவர்களுக்கு காய்ச்சல் வந்தால்தான் நல்லது - மருத்துவ அதிகாரி விளக்கம்


தொண்டை அடைப்பான் நோய்க்கு தடுப்பூசி போட்டவர்களுக்கு காய்ச்சல் வந்தால்தான் நல்லது - மருத்துவ அதிகாரி விளக்கம்
x
தினத்தந்தி 9 Sept 2019 4:00 AM IST (Updated: 9 Sept 2019 2:59 AM IST)
t-max-icont-min-icon

உயிரை பறிக்கும் தொண்டை அடைப்பான் நோய் பரவி வருவதை தடுக்கும் வகையில் பள்ளிகளில் தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களுக்கு காய்ச்சல் வந்தால்தான் நல்லது என்று மருத்துவ துறை அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.

ராமநாதபுரம்,

கடந்த 20 முதல் 30 ஆண்டுகளுக்கு முன்பு காரின் பாக்டீரியம் டிப்தீரியா என்ற வைரஸ் கிருமியால் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை தாக்கி பலரையும் உயிர் பலி வாங்கிய தொண்டை அடைப்பான் நோய் உரிய தடுப்பு மருந்துகள் மூலம் முற்றிலுமாக கட்டுப்படுத்தப்பட்டது.

இந்தநிலையில் தற்போது இந்த தொண்டை அடைப்பான் நோய் முழுவீரியத்துடன் மீண்டும் உருவெடுத்து சிறுவர்கள் மட்டுமல்லாது பெரியவர்களையும் தாக்கி வருவது குறிப்பிடத்தக்கது. இதன்காரணமாக இந்த வைரஸ் கிருமியிடம் இருந்து மக்களை காப்பாற்ற அரசு தடுப்பூசி போட நடவடிக்கை எடுத்துள்ளது.

இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட சுகாதார துணை இயக்குனர் டாக்டர் குமரகுருபரன் கூறியதாவது:-

தொண்டை அடைப்பான் நோய் முழு வீரியத்துடன் தற்போது பெரியவர்களையும் பாதித்து வருகிறது. மதுரை, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இந்த நோய் தாக்குதல் பரவலாக ஏற்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து இந்த நோய் காற்றின் மூலம் பரவும் தன்மை கொண்டது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் வடக்கு கர்நாடகா பகுதியில் குல்பர்கா மாவட்டத்தில் மகளிர் மருத்துவ கல்லூரியில் 25 மாணவிகளுக்கு இந்த நோய் பாதிப்பு ஏற்பட்டு அபாய நிலைக்கு சென்று மீட்கப்பட்டுள்ளனர். அந்த அளவிற்கு ஆபத்தானது. உரிய மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள்ளாவிட்டால் உயிரையே பறித்துவிடும் ஆபத்து உள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஏராளமானோர் வெளிநாடுகள், வெளிமாநிலங்களுக்கு சென்று வருவதால் அவர்கள் மூலம் இந்த நோய் பாதிப்பு ஏற்பட்டு விடாமல் தடுக்க கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. சமீபத்தில் ராமநாதபுரம் அருகே திருப்பாலைக்குடியில் இந்த நோய் பாதிப்பின் அறிகுறி இருப்பது போன்று 2 பேர் கண்டறியப்பட்டனர். உடனடியாக அவர்கள் மதுரை மருத்துவ கல்லூரிக்கு அனுப்பப்பட்டு முழு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் பாதிப்பு இல்லை என்றும் சாதாரண தொண்டை தொற்று என்பது உறுதி செய்யப்பட்டது.

மாவட்டத்தில் இதுவரை 3½ லட்சம் பேருக்கு இந்த தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இன்னும் 3½ லட்சம் பேருக்கு போட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு தேவையான மருந்து தயார் நிலையில் உள்ளது. இந்த தடுப்பூசி போடுவதால் காய்ச்சல் மற்றும் கையில் வலி ஏற்படும் என்பது உண்மை. இதற்கு யாரும் அஞ்ச தேவையில்லை. மருந்து முழுவீரியத்துடன் வேலை செய்கிறது என்பதே இதற்கு அர்த்தம். புதிதாக தடுப்பு மருந்து உடலுக்குள் செல்லும்போது வெள்ளை அணுக்கள் அதிகஅளவில் உருவாகி நோய் எதிர்ப்பு சக்தி ஏற்படும். அப்போது காய்ச்சல் ஏற்படுவது இயற்கை தான்.

எனவே காய்ச்சல், கைவலி வந்தால்தான் நல்லது. இதற்காக மக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை. சாதாரண பாரசிட்டமால் மாத்திரை போட்டுக்கொண்டு வலிக்கு ஐஸ் கட்டி வைத்தால் சரியாகி விடும். உங்கள் நலனுக்காக போடப்படும் தடுப்பூசியை தயங்காமல் போட்டுக்கொள்ள வேண்டும். மக்களின் அச்சத்தை போக்க டாக்டர்கள் மூலம் யூனியன் வாரியாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story