பெங்களூருவில், அடுக்குமாடி குடியிருப்பில் ஐ.எப்.எஸ். அதிகாரி தூக்குப்போட்டு தற்கொலை காரணம் என்ன? போலீஸ் விசாரணை


பெங்களூருவில், அடுக்குமாடி குடியிருப்பில் ஐ.எப்.எஸ். அதிகாரி தூக்குப்போட்டு தற்கொலை காரணம் என்ன? போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 9 Sept 2019 3:15 AM IST (Updated: 9 Sept 2019 3:15 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் அடுக்குமாடி குடியிருப்பில் ஐ.எப்.எஸ். அதிகாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அதற்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெங்களூரு,

பெங்களூரு எலகங்கா நியூடவுன் அருகே தொட்டபள்ளாப்புரா மெயின் ரோட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் அவதார் சிங்(வயது 52). இவர், ஐ.எப்.எஸ். அதிகாரி ஆவார். மல்லேசுவரத்தில் உள்ள வனத்துறை அலுவலகத்தில் தலைமை அதிகாரியாக அவதார் சிங் பணியாற்றி வந்தார். அவரது சொந்த ஊர் அரியானா மாநிலம் ஆகும். அவதார் சிங்கிற்கு திருமணமாகி மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். தனது குடும்பத்தினருடன் அவதார் சிங் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார்.

நேற்று காலையில் நடைபயிற்சிக்கு சென்று விட்டு அவர் வீட்டுக்கு வந்தார். பின்னர் மனைவி, குழந்தைகளுடன் சேர்ந்து அவர் காலை உணவு சாப்பிட்டார். அதன்பிறகு, வீட்டின் படுக்கை அறைக்கு சென்ற அவதார் சிங் நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி கதவை திறக்கும்படி பலமுறை கூறியும் அவதார் சிங் கதவை திறக்கவில்லை. இதுபற்றி அக்கம் பக்கத்தினருக்கு அவதார் சிங்கின் மனைவி தெரிவித்தார்.

உடனே அவர்கள், ஓடிவந்து வீட்டுக்கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது அங்கு அவதார் சிங் தூக்கில் பிணமாக தொங்கினார். இதைப்பார்த்து அவதார் சிங்கின் மனைவி கதறி அழுதார். இதுபற்றி அறிந்ததும் எலகங்கா நியூடவுன் போலீசார் விரைந்து வந்து அவதார் சிங்கின் உடலை கைப்பற்றி விசாரித்தனர். தகவல் அறிந்ததும் துணை போலீஸ் கமிஷனர் பீமாசங்கர் குலேத் மற்றும் போலீஸ் அதிகாரிகள் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவதார் சிங் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

மேலும் அவருக்கு நீரிழிவு நோய் இருந்ததும், அதனால் மனதளவில் அவர் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும், அதன் காரணமாக அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர். இருப்பினும் வேறு ஏதாவது காரணமா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைக்கு பின்பு அவதார் சிங்கின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதற்கிடையில், வேலைப்பளு காரணமாக அவதார் சிங் தற்கொலை செய்ய வாய்ப்பில்லை என்றும், அவர் தினமும் ஒன்று அல்லது 2 ஆவணங்களை சரி பார்க்கும் பணியில் ஈடுபடுவார் என்றும், தலைமை வன பாதுகாப்பு அதிகாரி புனாதி ஸ்ரீதர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எலகங்கா நியூடவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story