பெரம்பலூர் நகராட்சி பகுதியில் 30-ந் தேதிக்குள் கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டாயமாக அமைக்க வேண்டும்


பெரம்பலூர் நகராட்சி பகுதியில் 30-ந் தேதிக்குள் கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டாயமாக அமைக்க வேண்டும்
x
தினத்தந்தி 9 Sept 2019 4:00 AM IST (Updated: 9 Sept 2019 3:42 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர் நகராட்சி பகுதியில் வருகிற 30-ந் தேதிக்குள் கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டாயமாக அமைக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் சாந்தா உத்தரவிட்டுள்ளார். பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பெரம்பலூர், 

தற்போது நிலவி வரும் கடுமையான வறட்சியினை கருத்தில் கொண்டு மத்திய- மாநில அரசுகள் மழை நீரை சேகரிக்க அதிகமான முக்கியத்துவத்துடன் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரு கின்றன. மேலும் பெரம்பலூர் மாவட்டத்தில் போதிய மழை பெய்யாததாலும், மற்ற மாவட்டங்களைவிட பெரம்பலூரில் அதிக வறட்சி நிலவி வருவதாலும் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்வதில் மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. மேலும் மற்ற மாவட்டங்களை விட பெரம்பலூர் மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் மிகவும் பாதாளத்திற்கு சென்றுவிட்டதால் ஆழ்துளை கிணறுகள் மற்றும் நீர்நிலைகள் வறண்டுவிட்டன.

எனவே, பெரம்பலூர் நகராட்சி எல்லைக்குட்பட்ட பொதுமக்கள் அனைவரும் மழைநீர் சேகரிப்பு அமைப்பு ஏற்படுத்தி பராமரிப்பு செய்ய வேண்டும். குடியிருப்பு கட்டிடம், வணிக கட்டிடம், திருமண மண்டபங்கள் மற்றும் இதர கட்டிடங்கள் குறிப்பாக (சுமார் 500 சதுர அடி அளவிற்கு மிகுதியாக உள்ள) அனைத்திலும் வருகிற 30-ந் தேதிக்குள் மழைநீர் சேகரிப்பு அமைப்பு கண்டிப்பாக ஏற்படுத்தப்பட வேண்டும். அவ்வாறு மழைநீர் சேகரிப்பு அமைப்பு கட்டப்படாத கட்டிடங்களுக்கு ஏற்கனவே, வழங்கப்பட்டுள்ள குடிநீர் இணைப்புகள், பாதாள சாக்கடை இணைப்புகள் கண்டிப்பாக துண்டிப்பு செய்யப்படும். எனவே பொதுமக்கள் இப்பணியினை நம் வருங்கால சந்ததிகளுக்கு சேர்த்து வைக்கும் சொத்தாக கருதி உடனே நடைமுறைப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

Next Story