மத்திய சிறையில் போலீசார் திடீர் சோதனை; செல்போன்கள், கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல்


மத்திய சிறையில் போலீசார் திடீர் சோதனை; செல்போன்கள், கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 9 Sept 2019 4:30 AM IST (Updated: 9 Sept 2019 4:05 AM IST)
t-max-icont-min-icon

மதுரை மத்திய சிறையில் போலீசார் நடத்திய திடீர் சோதனையில் செல்போன்கள், சிம் கார்டுகள், கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மதுரை,

மதுரை மத்திய சிறையில் கஞ்சா, செல்போன் போன்றவை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அவை கைதிகளிடையே புழக்கத்தில் இருந்து வருகிறது. இந்த பொருட்களின் பயன்பாடு குறித்து அவ்வப்போது போலீசார் மதுரை சிறைக்குள் சோதனை நடத்தி அவற்றை பறிமுதல் செய்கின்றனர். இதற்கிடையே சிறையில் தடை செய்யப்பட்ட பொருட்கள் புழக்கத்தில் இருந்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

இதையடுத்து நேற்று காலை 6 மணி அளவில் திலகர்திடல் போலீஸ்நிலையத்தின் உதவி கமிஷனர் வெற்றிச்செல்வன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சக்கரவர்த்தி, இளவரசுபாண்டி, நாகராணி மற்றும் டவுன் போலீசார், ஆயுதப்படை போலீசார் என 100-க்கும் மேற்பட்டோர் சிறையில் அதிரடியாக நுழைந்து சோதனையில் ஈடுபட்டனர்.

அவர்கள் அங்கிருந்த விசாரணை கைதிகள், தண்டனை கைதிகளின் அறைகள், தனித்தனி அறைகள், பெண்கள் சிறை, கழிவறைகள், சமையல் கூடம் உள்பட சிறை வளாகம் முழுவதும் தீவிர சோதனை நடத்தினர்.

1 மணி நேரம் நடந்த இந்த சோதனையின் முடிவில் கைதிகள் அறையில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த 2 செல்போன்கள், 3 சிம் கார்டுகள், கஞ்சா பொட்டலங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

அடிக்கடி சிறையில் போலீசார் சோதனை செய்து, தடை செய்யப்பட்ட பொருட்களை பறிமுதல் செய்தாலும், மீண்டும் அவை கைதிகளிடையே புழக்கத்துக்கு வந்து கொண்டு தான் இருக்கின்றன.

இதற்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் சிறையில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Next Story