தியாகதுருகம் அருகே, வாலிபர் தீக்குளித்து தற்கொலை காரணம் என்ன? போலீசார் விசாரணை
தியாகதுருகம் அருகே வாலிபர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது சாவுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கண்டாச்சிமங்கலம்,
தியாகதுருகம் அருகே உள்ள பழையபல்லகச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் ஆனைக்குட்டி. இவரது மகன் தணிகாசலம் (வயது 27). நேற்று முன்தினம் இரவு வீட்டில் அனைவரும் தூங்கி கொண்டிருந்த போது தணிகாசலம் மண்எண்ணெயை எடுத்து தனது உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில் உடல் முழுவதும் தீ பற்றி எரிந்ததில் வலியால் அலறி துடித்த அவர் வீட்டுக்குள் இருந்து வெளியே ஓடி வந்தார். அப்போது அவர் வீட்டுவாசலில் தூங்கிக்கொண்டிருந்த அவரது அண்ணன் வேலு மகன் பூபாலன் மீது விழுந்தார். இதில் பூபாலன் மீதும் தீ பரவி எரிந்ததில் அவர் அலறி துடித்தார். இந்த சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் தீக்காயமடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதில் தணிகாசலம் மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். பூபாலனுக்கு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தணிகாசலம் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலை செய்து கொண்ட தணிகாசலத்துக்கு மகேஸ்வரி(20) என்ற மனைவி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story