எழும்பூர் ரெயில் நிலையத்தில் 46 கிலோ கஞ்சா பறிமுதல் - 3 பெண்கள் கைது


எழும்பூர் ரெயில் நிலையத்தில் 46 கிலோ கஞ்சா பறிமுதல் - 3 பெண்கள் கைது
x
தினத்தந்தி 9 Sep 2019 10:30 PM GMT (Updated: 9 Sep 2019 6:29 PM GMT)

சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் 46 கிலோ கஞ்சாவை கடத்தி வந்த 3 பெண்கள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை,

சென்னை எழும்பூர் ரெயில் நிலையம் வழியாக ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து குற்றப்புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் ஜெயந்தி தலைமையிலான போலீசார் ரெயில் நிலைய வளாகத்தில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது எழும்பூர் ரெயில் நிலையத்தின், பின்புறத்தில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் சந்தேகப்படும்படியாக பையுடன் 4 பேர் சுற்றித்திரிவதை குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் கவனித்தனர். இதையடுத்து அந்த 4 பேரையும் மடக்கிப்பிடித்து அவர்களது பைகளை சோதனை செய்தனர். அதில் அந்த 4 பேரின் பைக்குள் 23 பொட்டலங்களாக, 46 கிலோ கஞ்சா இருந்தது போலீசாருக்கு தெரியவந்தது.

இதையடுத்து அந்த 4 பேரிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் தேனி மாவட்டத்தை சேர்ந்த கணேசன் (வயது 42), சசிகலா (38), பாண்டீஸ்வரி (35), திருச்சியைச் சேர்ந்த பாத்திமா சலீம் (66) என்பதும், ஆந்திராவில் இருந்து ரெயில் மூலம் கஞ்சா பொட்டலங்கள் கொண்டு வந்ததும் தெரியவந்தது.

மேலும் அவர்கள் 4 பேரும் எழும்பூரில் இருந்து ஆட்டோ மூலம் கோயம்பேடு சென்று பஸ் மூலம் தேனி மாவட்டம் செல்ல திட்டமிட்டிருந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் கஞ்சா கடத்தி வந்த 4 பேரையும் கைது செய்தனர்.

Next Story