ரெயில்வே திட்டங்கள்-பணிகள் குறித்து எம்.பி.க்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் தெற்கு ரெயில்வே தலைமை அலுவலகத்தில் நடந்தது


ரெயில்வே திட்டங்கள்-பணிகள் குறித்து எம்.பி.க்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் தெற்கு ரெயில்வே தலைமை அலுவலகத்தில் நடந்தது
x
தினத்தந்தி 10 Sept 2019 4:30 AM IST (Updated: 10 Sept 2019 12:14 AM IST)
t-max-icont-min-icon

ரெயில்வே திட்டப்பணிகள் குறித்து விவாதிக்கும் வகையில் தமிழக எம்.பி.க்களுடன், ரெயில்வே அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம், தெற்கு ரெயில்வே தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது.

சென்னை,

தெற்கு ரெயில்வேயில் சென்னை, மதுரை, சேலம், திருச்சி, திருவனந்தபுரம், பாலக்காடு உள்ளிட்ட 6 கோட்டங்கள் அடங்கியுள்ளன. இந்த கோட்டங்களில் செயல்படுத்தவேண்டிய ரெயில்வே திட்டங்கள், பயணிகள் நலன் சார்ந்த பணிகள், மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அந்தந்த தொகுதி நாடாளுமன்ற எம்.பி.க்களுடன், தெற்கு ரெயில்வே சார்பில் வருடத்துக்கு ஒருமுறை ஆலோசனை கூட்டம் நடத்தப்படும்.

அந்தவகையில் தெற்கு ரெயில்வேயில் உள்ளடங்கிய சென்னை மற்றும் சேலம் கோட்டங்களுக்கான எம்.பி.க் கள் ஆலோசனை கூட்டம், சென்னை சென்டிரல் அருகேயுள்ள தெற்கு ரெயில்வே பொதுமேலாளர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.

இந்த ஆலோசனை கூட்டத்துக்கு தெற்கு ரெயில்வே பொதுமேலாளர் (பொறுப்பு) ராகுல் ஜெயின் தலைமை தாங்கினார். கோட்ட மேலாளர்கள் பி.மகேஷ் (சென்னை), யு.ஆர்.ராவ் (சேலம்) மற்றும் துறை சார்ந்த உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

தமிழகத்தை சேர்ந்த மக்களவை எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, சு.திருநாவுக்கரசர், ஏ.செல்லக்குமார், தமிழச்சி தங்கபாண்டியன், கணேஷ்மூர்த்தி, வி.கலாநிதி வீராசாமி, சி.அண்ணாதுரை, பி.ஆர். நடராஜன், கவுதம் சிகாமணி, டி.ஆர்.வி.எஸ்.ரமேஷ், டி.என்.வி.செந்தில்குமார், எம்.கே.விஷ்ணுபிரசாத், எஸ்.ஆர்.பார்த்திபன், டி.எம். கதிர் ஆனந்த், கணேஷ் செல்வம், எஸ்.ஜோதிமணி,

மாநிலங்களவை எம்.பி.க்கள் டி.கே.ரங்கராஜன், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், ஆர்.எஸ்.பாரதி, என்.சந்திரசேகரன், முகமது ஜான், ஏ.கே.செல்வராஜ், பி.வில்சன் ஆகியோர் கலந்துகொண்டனர். மேலும் சித்தூர், திருப்பதி எம்.பி.க்களும் பங்கேற்றனர்.

ஆலோசனை கூட்டத்தில் தொகுதி வாரியாக ரெயில்வே சார்ந்த திட்டங்கள் குறித்து பேசப்பட்டது. உறுதி அளிக்கப்பட்ட திட்டங்கள் மற்றும் அதுதொடர்பான மேம்பாட்டு பணிகள் ஆலோசிக்கப்பட்டன. நிலுவையில் உள்ள திட்டங்கள், தாமதத்திற்கான காரணம் என்ன? உள்ளிட்டவை தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து தங்கள் தொகுதியில் முன்னெடுக்கப்பட வேண்டிய திட்டங்கள் குறித்து எம்.பி.க்கள் பேசினர். அப்போது எதிர்கால திட்டங்கள், நீண்டகால திட்டங்கள் தொடர்பாகவும் மக்கள் கருத்துகளை முன்வைத்து அவர்கள் வலியுறுத்தி பேசினார்.

இந்த கூட்டம் காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 3 மணிக்கு நிறைவடைந்தது.

கூட்டத்தை தொடர்ந்து டி.ஆர்.பாலு எம்.பி. நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் பல ஆண்டுகளாக முடங்கியுள்ள ரெயில் பணிகள் குறித்து வலியுறுத்தினேன். குறிப்பாக சென்னை-திருப்பதி சாலை, அம்பத்தூர் டி.ஐ. சைக்கிள் நிறுவனம் அருகே 4 வழி மேம்பாலம் அமைத்தல், தொகுதியில் ஆமை வேகத்தில் நடைபெறும் சுரங்கப்பாதை அமைக்கும் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினேன்.

அம்பத்தூர்-ஆவடி- ஸ்ரீபெரும்புதூர்-கூடுவாஞ்சேரி இடையே புதிய ரெயில் பாதை திட்டம், அம்பத்தூர் புறநகர் ரெயில்சேவை மையமாக அறிவித்து, அங்கு அனைத்து ரெயில்களும் நின்று செல்ல வழிவகை ஏற்படுத்துதல், தாம்பரம் ரெயில் நிலையத்தில் தேஜஸ் ரெயில் நின்று செல்லவேண்டும் உள்ளிட்டவற்றை கோரிக்கைகளாக முன்வைத்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

சு.திருநாவுக்கரசர் கூறுகையில், “ரெயில்வே தேர்வுகளில் மாநில மொழிகளில் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும். ரெயில்வே பணிகளில் அந்ததந்த மாநில இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கவேண்டும். திருச்சியில் இருந்து சென்னைக்கு மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரெயிலைப் போல் இருமார்க்கமாக காலை நேரத்திலும் ஒரு ரெயில் இயக்கவேண்டும். இதைப்போல் திருச்சியில் இருந்து பெங்களூரு, ஐதராபாத் உள்ளிட்ட நகரங்களுக்கு கூடுதல் ரெயில் இயக்கவேண்டும். கரைக் குடி-திருவாரூர் இடையே 75 ரெயில்வே கேட்டில் ஆட்கள் பணியில் அமர்த்தாததால் அந்த வழியே ரெயில் சேவை தொடங்கப்படவில்லை. எனவே இதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தேன்”, என்றார்.

தமிழச்சி தங்கபாண்டியன் கூறுகையில், “தென்சென்னை தொகுதிக்குட்பட்ட அனைத்து ரெயில் நிலையங்களிலும் பெண்களுக்கு பாலூட்டும் அறை அமைத்து தரப்பட வேண்டும். நடைமேடைகளிலேயே டிக்கெட் கவுண்ட்டர்கள் அமைக்க வேண்டும். மயிலாப்பூர் பறக்கும் ரெயில் நிலையத்தில் பழுதடைந்துள்ள எஸ்கலேட்டர், லிப்ட் சரிசெய்து தரப்பட வேண்டும் என்று வலியுறுத்தினேன்”, என்றார்.

ஆலோசனை கூட்டத்தில் எம்.பி.க்கள் முன்வைத்த கருத்துகள் மற்றும் வலியுறுத்திய திட்டப்பணிகள் குறித்து அறிக்கையாக தயார் செய்யப்பட இருக்கிறது. இந்த அறிக்கை மத்திய ரெயில்வே வாரியத்துக்கு விரைவில் அனுப்பப்பட இருக்கிறது.

Next Story