முசுண்டப்பட்டியில் கண்மாய் சீரமைப்பு பணி - கலெக்டர் ஆய்வு
முசுண்டப்பட்டி ஊராட்சியில் உள்ள கண்மாயை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. இதை கலெக்டர் ஆய்வு செய்தார்.
எஸ்.புதூர்,
ஊரக வளர்ச்சித் துறை மூலமாக மேற்கொள்ளப்படும் குடிமராமத்து பணிகள் மூலம் கண்மாய்கள் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி வலசைபட்டி பில்லு கண்மாய், முசுண்டபட்டி பொட்ட கண்மாய், பெருமாள் குளம், ஆகியவற்றில் நடைபெற்று வரும் சீரமைப்பு பணிகளை கலெக்டர் ஜெயகாந்தன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் அங்கிருந்தவர்களிடம் குறைகள் மற்றும் ஆக்கிரமிப்புகளை கேட்டறிந்தார். ஜே.சி.பி. பணியாளர்களின் வேலை நேரம், காலையில் வேலை தொடங்கும் நேரம், மாலையில் வேலை முடியும் நேரம், உணவு இடைவேளைக்கு செல்லும் நேரம் ஆகியவற்றை ஆயக்கட்டு தாரர்களிடம் கேட்டறிந்தார். பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
வரத்து கால்வாய்களை சீரமைத்து, வருகிற மழை காலங்களின் போது, மழை நீரை தேக்கும் வகையில் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு நாம் தயார் நிலையில் இருக்க வேண்டும் என கூறினார். இந்த பணிகள் எஸ்.புதூர் ஒன்றியத்தில் சிறப்பாக நடைபெற்று வருவதாகவும், இதற்கு ஆயக்கட்டு தாரர்கள் மற்றும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் கூறினார்.
தமிழக அரசு கொண்டு வந்துள்ள குடிமராமத்து பணி திட்டங்கள் முழுமையாக நிறைவேற அனைத்து விவசாயிகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டு குடிமராமத்து பணியில் தங்களது பாசனக்கண்மாய்களை முழுமையாக சீரமைத்து, விவசாய பணிகளுக்கு ஏதுவாக அமைத்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு பாசனக் கண்மாயிலும் மடைகள், கழுங்குகள் அனைத்தும் சீரமைக்கப்படுகிறது. அதே போல் ஆக்கிரமிப்புகளை அகற்றவும், தடுப்பு சுவர் கட்டுவதற்கு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
எனவே இந்த திட்டத்தை நல்ல முறையில் விவசாயிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று கலெக்டர் கூறினார். இந்த நிகழ்ச்சியில் திட்ட இயக்குனர் வடிவேல், மகளிர் திட்ட இயக்குனர் அருள்மணி, ஊரக வளர்ச்சி பொறியாளர் முருகன், உதவி செயற்பொறியாளர் நபியாதுல் முசிரியால், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) ஸ்ரீதர், உதவி பொறியாளர் இளங்கோவன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் காளைலிங்கம் உள்பட அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story