அரக்கோணத்தை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வலியுறுத்தி மனிதசங்கிலி போராட்டம்


அரக்கோணத்தை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வலியுறுத்தி மனிதசங்கிலி போராட்டம்
x
தினத்தந்தி 9 Sep 2019 11:15 PM GMT (Updated: 9 Sep 2019 6:48 PM GMT)

அரக்கோணத்தை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வலியுறுத்தி மனிதசங்கிலி போராட்டம் நடந்தது.

அரக்கோணம்,

அரக்கோணத்தை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வலியுறுத்தி அரக்கோணம் அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நேற்று தாலுகா அலுவலகம் முன்பு மனிதசங்கிலி போராட்டம் நடந்தது. போராட்டத்துக்கு ஒருங்கிணைப்பாளர்கள் கே.எம்.தேவராஜ், நைனாமாசிலாமணி ஆகியோர் தலைமை தாங்கினர்.

போராட்டத்தில் ஒருங்கிணைப்பாளர்கள் பேசியதாவது:-

வேலூர் மாவட்டத்தை 3 ஆக பிரித்து வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகியவற்றை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். கடந்த 30 ஆண்டுகளாக அரக்கோணத்தை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வரும் வேளையில் யாருமே எதிர்பாக்காத வகையில் ராணிப்பேட்டையை அறிவித்தது கண்டனத்திற்குரியது.

மாவட்டம் உருவாக்குவதற்கு முன்பாக பொதுமக்களிடம் கருத்து கேட்டுவிட்டு அறிவிப்பு வெளியிட வேண்டும். ஆனால் தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்ட பின்னர் மக்களிடம் கருத்து கேட்டு வருகிறது. கருத்து கேட்பு கண்துடைப்பாகதான் இருக்கிறது.

அரக்கோணம் அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மனிதசங்கிலி போராட்டம் நடத்தி உள்ளோம். அரக்கோணத்தை தனி மாவட்டமாக உருவாக்கும் வரை பல்வேறு போராட்டங்கள் நடைபெறும். இவ்வாறு அவர்கள் பேசினர்.

போராட்டத்தின் போது, அரக்கோணம் அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், எஸ்.சி., எஸ்.டி. கூட்டமைப்பினர், ரெயில் பயணிகள், ரோட்டரி, அரிமா சங்க நிர்வாகிகள், சமூக அமைப்பு நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

பின்னர் அவர்கள், அரக்கோணம் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் ஜெயக்குமாரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட தாசில்தார் இதுகுறித்து உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக கூறினார்.

Next Story