கோட்டை அகழியை தூர்வார மிதவைகள் வரவழைப்பு ; இன்று பணிகள் தொடக்கம்
‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் வேலூர் கோட்டை அகழியை தூர்வார மிதவைகள் வரவழைக்கப்பட்டுள்ளன. ஆடுவெட்டி சிறப்பு பூஜை செய்து இன்று பணிகள் தொடங்கப்படுகின்றன.
வேலூர்,
வேலூர் மாநகரம் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டதையடுத்து மாநகரை மேம்படுத்த மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சாலைகள், பூங்காக்கள் அமைத்தல் உள்பட பல்வேறு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
வேலூரின் அடையாளமாக திகழும் வேலூர் கோட்டையும் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் அழகுப்படுத்த முடிவு செய்யப்பட்டு, அதற்காக ரூ.33 கோடி நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் முதல் கட்டமாக தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்தியக்கோட்டைகளில் தனக்கென தனி இடத்தை வேலூர் கோட்டை பிடிக்க காரணம் அகழியுடன் அமைந்துள்ளதே ஆகும். இந்த அகழியில் சில ஆண்டுகளுக்கு முன்புவரை படகு சவாரியும் முன்பு நடந்தது. பின்னர் நாளடைவில் படகுசவாரி கைவிடப்பட்டது.
தற்போது அகழி தூர்ந்து போய் காணப்படுகிறது. கோட்டையின் ஒரு பகுதிக்கு தண்ணீர் செல்லாமல் மேடாக மண் திட்டு போல் காட்சி அளிக்கிறது. அந்த இடத்தில் செடி கொடிகள் ஆக்கிரமித்து கோட்டையின் அழகை கெடுப்பதாக அமைந்துள்ளது.
இதுகுறித்து நடவடிக்கை எடுத்து அகழியை தூர்வார வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் கோட்டை அகழியை தூர்வார டெண்டர் விடப்பட்டு, தூர்வாரும் பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது.
பொக்லைன் எந்திரங்கள் வரவழைக்கப்பட்டு அகழியில் உள்ள செடி, கொடிகள் அகற்றப்பட்டன. மேலும் தற்போது மேடான பகுதியில் உள்ள மண் அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் அகழியில் தண்ணீர் தேங்கி உள்ள இடத்திலும் செடி, கொடிகள் அதிகம் உள்ளது. மேலும் குப்பைகள் நிறைந்து தண்ணீரை மாசுபடுத்தி வருகிறது. எனவே நீருக்கு அடியில் உள்ள குப்பைகள் மற்றும் செடி, கொடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி சென்னையில் இருந்து 4 ஜோடி மிதவைகள் வரவழைக்கப்பட்டுள்ளது. அந்த மிதவைகள் கோட்டையின் பின்புறம் இறக்கி வைக்கப்பட்டுள்ளன. சுமார் 50 அடி நீளம், 20 அடி அகலம், 6 அடி உயரம் கொண்ட மிதவைகளை அப்பகுதி பொதுமக்கள் பார்த்துச் செல்கின்றனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், “கோட்டை அகழிக்கு கீழ் உள்ள பகுதியை தூர்வார முடிவு செய்யப்பட்டது. அதன்படி சென்னையில் உள்ள ஏரிகளையும், கூவம் ஆற்றையும் மிதவைகள் மூலம் தூர்வாரும் நிறுவனத்தினரை தொடர்பு கொண்டு கோட்டை அகழியை தூர்வார வரவழைத்துள்ளோம். மிதவைக்கு மேல் பொக்லைன் எந்திரத்தை நிறுத்தி, அந்த எந்திரங்கள் நீருக்கு அடியில் உள்ள குப்பை, செடிகளை அள்ளி வெளியே கொண்டு வந்து லாரியில் கொட்டும். பின்னர் அவை அகற்றப்படும். 4 ஜோடி மிதவைகளில் 4 பொக்லைன் எந்திரங்கள் இந்த பணியை மேற்கொள்ள உள்ளது” என்றனர்.
மிதவைகளை பயன்படுத்தும் சென்னை நிறுவன தொழிலாளர்களிடம் கேட்டபோது, “நாங்கள் பல்வேறு சவாலான பணிகளை மேற்கொண்டுள்ளோம். பொக்லைன் எந்திரங்கள் இன்று (நேற்று) இரவு வந்துவிடும். அதன்பின்னர் அகழியை நாளை (இன்று) காலை முதல் நீருக்குள் மிதவைகளை இறக்கி பணிசெய்ய உள்ளோம். இந்த அகழியில் பலர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். மேலும் தூர்வாரி பல ஆண்டுகள் ஆவதால் அருகில் உள்ள முனீஸ்வரன் கோவிலில் ஆடு வெட்டி சிறப்பு பூஜை செய்து, பணியை தொட ங்க உள்ளோம்” என்றனர்.
Related Tags :
Next Story