மின் கம்பம் ஒடிந்து ஊழியர்கள் படுகாயம், சந்திரபிரபா எம்.எல்.ஏ நேரில் ஆறுதல்
மின் கம்பம் ஒடிந்து விழுந்ததில் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் 2 தொழிலாளர்களுக்கு சந்திரபிரபா எம்.எல்.ஏ. நேரில் ஆறுதல் கூறினார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் மின் வாரிய அலுவலகத்தில் ஒப்பந்த ஊழியர்களாக பணியாற்றி வரும் நொச்சிக்குளத்தைச் சேர்ந்த குருசெல்வம், அத்திக்குளத்தைச் சேர்ந்த ஸ்ரீராம் ஆகிய இருவரும் தாலுகா அலுவலகம் அருகே விவசாய நிலங்களுக்கு மின் இணைப்பு வழங்க புதிய மின் கம்பங்கள் நடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது மின் கம்பம் ஒடிந்து விழுந்ததில் அவர்கள் இருவரும் பலத்த காயம் அடைந்தனர். இதைத் தொடர்ந்து அவர்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் எம்.எல்.ஏ. சந்திரபிரபா ஆஸ்பத்திரிக்கு நேரில் சென்று சிகிச்சை பெற்று வரும் 2 பேரையும் பார்த்து ஆறுதல் கூறினார். இனிவரும் காலங்களில் புதிதாக நடப்படும் மின் கம்பங்களை உரிய சோதனைக்குப் பின்னரே நடுதல் வேண்டும் என்று மின் வாரிய அதிகாரிகளை எம்.எல்.ஏ கேட்டுக் கொண்டார்.
மின் கம்பம் ஒடிந்து விழுந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், தரமற்ற மின் கம்பங்கள் திருப்பி அனுப்பப்பட்டு வருவதாகவும், இது போன்ற சம்பவங்கள் இனி நடைபெறாத வண்ணம் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் மின்வாரிய அதிகாரி எம்.எல்.ஏ.விடம் தெரிவித்தார். மேலும் அரசு ஆஸ்பத்திரியின் தரம் குறித்து எம்.எல்.ஏ. ஆய்வு மேற்கொண்டார். அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள், டிஜிட்டல் எக்ஸ்ரே கருவி வேண்டும் என்று எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை விடுத்தனர். விரைவில் தொகுதி மேம்பாடு நிதியில் இருந்து டிஜிட்டல் எக்ஸ்ரே கருவி வாங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று எம்.எல்.ஏ. உறுதி அளித்தார்.
Related Tags :
Next Story